கொழும்பில் 2008ஆம் ஆண்டு காணாமல்போன ஐந்து தமிழ் மாணவர்கள் பற்றிய விசாரணைகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பூர்த்தியடைந்துள்ளன. இந்த விசாரணைகள் தொடர்பான அறிக்கைகள் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் என நீதிபதி ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று இறுதி சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2008ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை மருதானை, தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் இருந்து ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர்.
இது தொடர்பாக உறவினர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். அத்துடன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் சர்வதேச அமைப்புகளிடமும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தன.
குறித்த மாணவர்கள் கடத்தப்பட்டமைக்கு அப்போதைய கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பிருந்ததாக குற்றப்புலனாய்வு விசாரணைகள் மூலம் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.