கீழ்ப்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் 150 கிலோ எடையுடன் அவதிப்பட்ட பெண் ஒரு மாத சிகிச்சைக்குப்பின் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசில் கணவர் புகார் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை அருகே உள்ள சோ.கீழ்நாச்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன். இவரது மனைவி வளர்மதி (46).
குண்டு உடலுடன் காணப்பட்ட இவர் 150 கிலோ எடை இருந்தார். 26 வயதில் சதீஷ் குமார் என்ற மகனும், சரண்யா, சங்கீதா என 2 மகள்களும் உள்ளனர். இவர்களும் அதிக உடல் எடையுடனேயே காணப்பட்டனர்.
இதனை தொடர்ந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வளர்மதி உள்ளிட்ட 3 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த மாதம் 23-ந்தேதி முதல் டாக்டர்கள் எடை குறைப்பு சிகிச்சையை அளித்து வந்தனர்.
இவர்களில் வளர்மதிக்கு மட்டும் உடல் எடையை குறைப்பதற்கு 8 ஆபரேசன்கள் செய்யப்பட்டுள்ளன. கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் டாக்டர்கள் உடலை வெட்டி ஆபரேசன் செய்தனர். கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த வளர்மதியின் உடல் நிலையில் நேற்று நள்ளிரவு பின்னடைவு ஏற்பட்டது. அவர் திடீரென உயிரிழந்தார். இதனால் கணவர் அழகேசனும், மகன் மற்றும் மகள்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களது சிகிச்சையை முடித்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினர்.
இதுபற்றி கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் அழகேசன் புகார் செய்தார். அதில் டாக்டர்களின் தவறான சிகிச்சையாலேயே வளர்மதி உயிரிழந்து விட்டதாகவும், எனவே ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வளர்மதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு கண்ணீர் மல்க அழகேசன் கூறியதாவது:-
மனைவி வளர்மதி மற்றும் குழந்தைகளுக்கு உடல் எடை குறைப்பு ஆபரேசன் செய்வதற்காக நன்கொடையாளர்களையும் ஆஸ்பத்திரி நிர்வாகம் ஏற்பாடு செய்து வைத்திருந்தது. அவர்களிடமிருந்து ரூ.8 லட்சம் வரையில் நன்கொடை பெற்றுக் கொண்டே சிகிச்சை அளித்தனர்.
எனது மனைவியின் உடலை அறுவை சிகிச்சை என்ற பெயரில் பல இடங்களில் வெட்டி டாக்டர்கள் கூறுபோட்டு விட்டனர். இதுவே அவர் உயிரிழப்பதற்கு காரணமாகும். எனவே ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதிர்ஷ்டவசமாக எனது குழந்தைகள் தப்பித்து விட்டன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.