தனது வாழ்க்கைக்கு இடையூறு என எண்ணி பெற்ற மகனை பெண் துன்புறுத்தி உள்ளார். மேலும், அந்த சிறுவனை ஊட்டியில் தவிக்க விட்டுச்சென்றார். சிறுவனை போலீசார் மீட்டு பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 40). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரூத்மேரி (35). இவர்களுக்கு வினோத் (10) என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் கணவன்–மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். மேலும் ரூத்மேரிக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் வாழ்ந்து வருகிறார். இதனால் தான் வாழ்க்கை நடத்துவதற்கு மகன் வினோத் இடையூறாக இருப்பதாக ரூத்மேரி எண்ணினார்.
அதன் காரணமாக ரூத்மேரி தன் மகன் என்றும் பாராமல் வினோத்தை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் அவன் காயம் அடைந்து உள்ளான். ஒரு கட்டத்தில் தனக்கு மகனே வேண்டாம் என்று கூறி, வினோத்தை நேற்று முன்தினம் ஊட்டிக்கு அழைத்து வந்தார். பின்னர் மாரியம்மன் கோவில் பகுதியில் வினோத்தை கொண்டு வந்து அனாதையாக தவிக்க விட்டு விட்டு திருப்பூருக்கு சென்று விட்டார்.
அங்கு அழுது கொண்டிருந்த சிறுவனை பார்த்த கடை வியாபாரிகள், அவனுக்கு டீ கொடுத்து விசாரித்தனர். அப்போது தனது தாய் அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், அவர் ஒரு நபருடன் சென்று விட்டதாகவும் வினோத் தெரிவித்தான். இதுகுறித்து ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் இதுகுறித்து ஊட்டியில் உள்ள சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ஊட்டி போலீசார் மூலம் வினோத் சிறுவர் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டான். வினோத் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் கூறும்போது, ஊட்டியில் தனியாக தவித்துக்கொண்டு இருந்த சிறுவன் வினோத்தை மீட்டு சிறுவர் பாதுகாப்பு அமைப்பிடம் ஒப்படைத்து உள்ளோம். அந்த அமைப்பினர் திருப்பூரில் உள்ள சிறுவர் பாதுகாப்பு அமைப்பிடம் ஒப்படைத்து விடுவார்கள். தாய் வினோத்தை துன்புறுத்தியது குறித்து திருப்பூர் போலீசார் விசாரணை நடத்துவார்கள், என்றார். தாய் தனது மகனை துன்புறுத்தி ஊட்டியில் அனாதையாக விட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.