வட கொரியா, அமெரிக்கா விவகாரம் – ரஷியா கிண்டல்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் தொடர்ந்து வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

maxresdefault

வட கொரியாவை அழித்து விடுவேன் என டிரம்ப் மிரட்டினார். உடனே கிம் ஜாங் அன், “டிரம்புக்கு புத்தி பேதலித்து விட்டது, முதுமையினால் மனத்தளர்ச்சி அடைந்து விட்டார்” என விமர்சித்தார்.

அதற்கு டிரம்ப், “கிம் ஜாங் அன் பைத்தியக்காரர். சொந்த மக்களையே பட்டினி போடுகிறார் அல்லது கொல்கிறார். இதுவரையில் இல்லாத வகையில் அவர் சோதனைக்கு ஆளாக்கப்படுவார்” என எச்சரித்தார்.

இப்படி ஒருவருக்கொருவர் வார்த்தைகளை ஏவுகணை போல ஏவி விடுவது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி ரஷிய நாட்டின் வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், “டிரம்பும், கிம் ஜாங் அன்னும் மழலையர் வகுப்பில் படிக்கிற சிறிய குழந்தைகள்போல சண்டை போட்டுக்கொள்வதா? இருவரும் அதை நிறுத்திக்கொள்ள வேண்டும். வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் ஏற்றுக்கொள்ள முடியாததுதான். அதே நேரத்தில் கொரிய தீபகற்பத்தில் போரை கட்டவிழ்த்து விடுவோம் என அமெரிக்கா கூறுவதும் ஏற்க இயலாததுதான்” என்று கூறினார்.

மேலும், இந்த பிரச்சினையில் சீனாவுடன் சேர்ந்து, அர்த்தமுள்ள அணுகுமுறையை மேற்கொள்ளப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.