அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்த கிம் ஜோங் வுன்க்கு ஆதரவாக ஆயிரக் கணக்கான மக்கள் தலைநகரில் குவிந்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர். வடகொரிய தலைநகர் Pyongyang ல் குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
அமெரிக்கா மற்றும் ஐ.நா.மன்றம் அறிவித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளை வளர்ச்சியால் வடகொரியா முறியடிக்கும் போன்ற வசனங்கள் தாங்கிய பதாகைகளையும் பேரணியில் அவர்கள் ஏந்திச் சென்றனர். கடந்த வெள்ளியன்று வடகொரிய தலைவர் கிம் ஜோங் வுன் வெளியிட்ட அறிக்கையில், ”நாட்டின் உயரிய தலைமைப் பொறுப்பை வகிக்கும் தனிச்சிறப்புக்குத் தகுதியற்றவர் டிரம்ப். நெருப்புடன் விளையாடும் முரட்டுத்தனமானவர்.
கொரியாவை முழுவதுமாக அழித்துவிடுவதாக மிரட்டல் விடுத்த அவர் நிச்சயம் தகுந்த பரிசு பெறுவார்” என்று கூறியுள்ளார். அமெரிக்கா, தென் கொரியா நாடுகளை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய சோதனைகளை நிறுத்திக் கொள்ளும்படி ஐக்கிய நாடுகள் சபை மூலம் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. எனினும் வடகொரியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
கடந்த 3-ம் திகதி வடகொரியா ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. இதைத் தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹுவாசாங் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணை ஜப்பான் வான்வெளியில் சீறிப் பாய்ந்து கடலில் விழுந்தது. இது 2,300 மைல் தொலைவை 19 நிமிடங்களில் கடந்தது.
இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவின் குவாம் தீவை எங்களால் அழிக்க முடியும் என்று வடகொரியா மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளது. இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஐ.நா. பொதுக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், தன்னையும் தன் அண்டை நாடுகளையும் பாதுகாக்க, வட கொரியாவை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடகொரிய வெளியுறவு அமைச்சர், உலக நாடுகளின் பொருளாதார தடைகள் தங்கள் நாட்டினை எதுவும் செய்துவிடப்போவதில்லை எனவும், திட்டமிட்டபடி ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.