சுந்தர்.சி. இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற கலகலப்பு படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள் ஒப்பந்தமாகி உள்ளனர்.
`சங்கமித்ரா’ பிரமாண்ட படத்தை சுந்தர்.சி இயக்கவிருந்த நிலையில், சுருதி ஹாசன் படத்தில் இருந்து வெளியேறியதால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, `சங்கமித்ரா’ படத்திற்கான நடிகையை தேர்வு செய்வதில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த இடைப்பட்ட நேரத்தில் `கலகலப்பு’ படத்தின் அடுத்த பாகத்திற்கான கதையை சுந்தர்.சி எழுதியிருக்கிறார். மேலும் கதையின் முக்கால்வாசி பணிகள் முடிவடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகளும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி `கலகலப்பு-2′ படத்தில் ஜீவா, ஜெய், கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை சுந்தர்.சி-யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் தயாரிக்க இருக்கிறது. `கலகலப்பு-2′ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க இருப்பதாக குஷ்பு சுந்தர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2012-ஆம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `கலகலப்பு’ படத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து `சங்கமித்ரா’ படத்தின் பணிகள் வருகிற டிசம்பர் மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.