பதில் அளிக்காது வாகனத்தில் ஏறி தப்பியோடிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன

வடமாகாண சுகாதார தொண்டர்களுக்கு பதில் அளிக்காது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தப்பி ஓடிய சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வடபகுதியில் பல்வேறு கட்டடங்களை திறந்து வைப்பதற்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் நேற்று(24) மாலை வவுனியாவில் அமைக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையை திறந்து வைத்தார்.

rajitha sena

இதன்போது, நிரந்தர நியமனம் கோரி தொடர்ச்சியாக போராடிய நிலையில் மத்திய, மாகாண சுகாதார அமைச்சர்களின் வாக்குறுதிகளை நம்பி போராட்டத்தை கைவிட்டிருந்த சுகாதார தொண்டர்கள் தமது நியமனம் தொடர்பில் கேட்டுக் கொள்வதற்கும், மகஜர் ஒன்றினை கையளிப்பதற்கும் முயன்ற போது சுகாதார அமைச்சர் ராஜித, அவர்களை சந்திக்காமலும், ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காதும் உடனடியாக வாகனத்தில் ஏறி அங்கிருந்து சென்று விட்டார்.

இது தொடர்பில் சுகாதார தொண்டர்கள் கருத்து தெரிவிக்கையில்,

தாம் தொடர்ச்சியாக நிரந்தர நியமனம் கோரி போராடி வந்த நிலையில் ஒரு மாத காலத்திற்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்திற்கு அமைவாக எமது போராட்டத்தைக் கைவிட்டிருந்தோம்.

இன்று மத்தியம் சுகாதார அமைச்சரிடம் மகஜர் கையளித்து எமது நியமனம் தொடர்பில் கேட்டறிவதற்காக பல மணிநேரமாக காவல் இருந்த போதும் எம்மை சந்திக்காது சுகாதார அமைச்சர் சென்று விட்டார்.

இதனால் மிகுந்த மனவருத்தத்துடன் நாம் இரவு வேளையில் வீடு திரும்புவதாக கூறியுள்ளனர்.

இதேவேளை, ஊடகவியலாளர்களின் கேள்விக்கும் பதிலளிக்காது அவர் சென்றமை தொடர்பில் ஊடகவியலாளர்களும் அதிருப்தி வெளியிட்டு இருந்தனர்.