அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 3 ஆவது போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றி தொடரை தன்வசப்படுத்தியது.
இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என தொடரில் முன்னிலைபெற்றிருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் முக்கியமானதுமான போட்டி இன்று இந்தியாவில் இடம்பெற்றது.
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, ஆரோன் பின்ஞின் சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றது.
அவுஸ்திரேலிய அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஆரோன் பின்ஞ் 126 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பதிலுக்கு அணித் தலைவர் ஸ்மித் 63 ஓட்டங்களையும் வோர்ணர் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக குலதீப் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் 294 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றிபெற்று தொடரை தம் வசப்படுத்தும் நோக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சுமாரான தொடக்கத்தை வழங்கினர்.
இதையடுத்து பின்வரிசையில் இறங்கிய துடுப்பாட்ட வீரர்களும் தமது பங்களிப்பை சிறப்பாக வழங்க, இறுதியில் இந்திய அணி 47.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 294 ஓட்டங்களைப்பெற்று 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 3 ஆவது போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என தன்வசப்படுத்திக் கொண்டது.
இந்திய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ரஹானே 70 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 71 ஓட்டங்களையும் பாண்டியா 78 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக குமின்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் பாண்டியா தெரிவுசெய்யப்பட்டார்.