வடகொரியாவும் அமெரிக்காவும் முரண்படுவதை கைவிட வேண்டும் என, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கோரிக்கை விடுத்துள்ளார். மொஸ்கோவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, ‘வடகொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இருவரும் சிறுபிள்ளைத்தனமான முறையில் முரண்பட்டுக்கொள்கின்றனர். எனவே, இந்த இரு நாடுகளின் தலைவர்களும் தங்களுக்கு இடையில் முரண்பட்டுக்கொள்வதை கைவிட வேண்டும்’ என்றார். ‘மேலும், இந்த இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு அவசியமாகத் தீர்த்து வைக்கப்பட வேண்டும்.
இந்நிலையில், இந்த இரு நாடுகளுக்கும் இடையில் மற்றுமொரு நாடொன்றின் மத்தியஸ்தம் அவசியம் எனவும்’ அவர் கூறியுள்ளார். ஏவுகணை மற்றும் அணுவாயுதப் பரிசோதனைகளை வடகொரியா நடத்தியுள்ள நிலையில், இந்த இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலைமை அதிகரித்துள்ளதுடன், இந்த இரு நாடுகளின் தலைவர்களும் சூடான வார்த்தைப் பிரயோகங்களை பரிமாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.