கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் பூங்குடுதீவு பிரதேசத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற உயர்தர வகுப்பு மாணவி தன் வீட்டிலிருந்து காலை பாடசாலை செல்லும் போது கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு மிகக்கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இச் சம்பவத்தினையடுத்து இலங்கை முழுவதும் இந்த மாணவியின் கொலைக்கு நீதிகோரி பாரிய ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.
இதன்காரணமாக இக் குற்றச் சம்பவம் தொடர்பில் ஒன்பது சந்தேக நபர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இக் குற்றச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சுவிஸ்குமார் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில் பின்னர் வெ ள்ளவத்தைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் சில மாதங்கள் கடந்து ஊர்காவற்றுறை பொலிஸார் மேலும் ஒருவரை கைதுசெய்திருந்தனர்.
இதேவேளை குறித்த குற்றச்சம்பவம் தொடர்பான விசாரணையானது 2015.05.20 ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு பாராப்படுத்தப்பட்டது. இவர்கள் முன்னெடுத்த விசாரணைகளின் ஊடாக இவ் வழக்கின் 11 ஆவது மற்றும் 12 ஆவது சந்தகே நபர்களான இருவர் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் ஊடாக கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன் இது தொடர்பான வழக்கானது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.
சுமார் ஒன்றரை வருடங்களாக இவ் வழக்குத் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு இவ்வழக்கின் கோவைகள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாராப்படுத்தப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களத்தில் இவ் வழக்கானது பரிசீலிக்கப்பட்டு இவ்வழக்கின் 12 சந்தேக நபர்களில் 11 வது சந்தேக நபரான உதயசூரியன் சுரேஷ்கரன் சட்டமா அதிபரினால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு அரச தரப்பு சாட்சியாக மாற்றப்பட்டார்.
அத்துடன் 10 ஆம் மற்றும் 12 ஆம் சந்தேக நபர்கள் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள்.
இதன் பின்னர் இவ்வழக்கின் ஏனைய 9 சந்தேக நபர்களுக்கும் எதிராக சட்டமா அதிபரால் 41 குற்றச்சாட்டுக்கள் உள்ளடங்கிய குற்றப்பகிர்வுப் பத்திரம் தயார் செய்யப்பட்டது. அத்துடன் பிரதம நீதியரசரால் இவ்வழக்கை விசாரணை செய்வதற்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றுக்கு பாலேந்திரன் சசி மகேந்திரன் தலைமையிலான அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூன்று தமிழ்மொழிபேசும் மேல்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டார்கள்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட இந்த நீதிபதிகளை உள்ளடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணையானது கடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமானது. அன்றிலிருந்து குறிப்பிட்டகால இடைவெளியில் வழங்கு ஒத்திவைக்கப்பட்டு நேற்றையதினம் வரை 17 நாட்கள் இவ்வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இதன் போது இவ்வழக்கினை சட்டமாஅதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந், மாதினி விக்னேஸ்வரன் ஆகியோருடன் பிரதிசொலிஸிட்டர் ஜெனரல் குமார்ரட்ணம் நெறிப்படுத்தியிருந்தார்.
இதன்படி நேற்று புதன்கிழமை வழக்கின் இறுதிக்கட்ட நடவடிக்கையாக எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இவ்வழக்கின் 1,2,3,6,8 ஆகிய எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன, 5 ஆம் எதிரிசார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி, 4,7,9 ஆகிய எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னையா கேதீஸ்வரன் ஆகிய மூவரும் தம்தரப்பு தொகுப்புரைகளை பிற்பகல் 2.30 மணிவரை மேற்கொண்டிருந்தனர்.
இவ் எதிரிகளது தொகுப்புரை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வழக்குத் தொடுநர் தரப்பு தொகுப்புரை எழுத்துமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரையானது எழுத்துமூலமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் மன்றின் பதிவாளருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மன்று கட்டளையிட்டது.
தொடர்ந்து இவ்வழக்கின் தீர்ப்பானது இம்மாதம் 27 ஆம் திகதி இந்த திறந்த நீதிமன்றில் காலை 9 மணிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இவ்வழக்கின் அரச தரப்பு சாட்சியான உதயசூரியன் சுரேஷ்கரன் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் தீர்ப்பு தினமான 27 ஆம் திகதி மன்றில் முற்படுத்த வேண்டும் என வவுனியா சிறைச்சாலை அத்தியட்சருக்கு மன்று கட்டளையிட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணான வித்தியாவின் தாயாரையும் அன்றையதினம் மன்றில் ஆஜராகுவது தொடர்பில் அவருக்கு அறிவிக்குமாறு பதிவாளருக்கு மன்று உத்தரவிட்டதுடன் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை இவ் வழக்கின் 9 எதிரிகளையும் விளக்கமறியலில் வைக்க ட்யல் அட்பார் நீதிமன்று உத்தரவிட்டு கட்டளை பிறப்பித்தது.