இரவு நேர களியாட்ட விடுதியில் நடனத்தில் 15 வயதான சிறுமி – பொலிஸாரினால் மீட்பு

15 வயதான சிறுமியொருவர் இரவு நேர களியாட்ட விடுதியில் நடனத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

va

இரவு நேர களியாட்ட விடுதியில் ஏனைய பெண்களுடன் இந்த சிறுமி நடனத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் வசித்து வரும் குறித்த சிறுமி இன்னும் பாடசாலையில் பயின்று வருவதாக தெரியவருகிறது.

இதேவேளை, சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

நன்கு பழக்கமான 18 வயதான இளைஞன், சிறுமியை திருமண வைபவம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றதாகவும் அன்றில் இருந்து சிறுமி வீடு திரும்பவில்லை என பெற்றோர் தும்மலசூரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாடு தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுமி வெலிக்கடை பிரதேசத்தில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கு அமைய வெலிக்கடை பொலிஸார் குறித்த இரவு நேர களியாட்ட விடுதியை சுற்றிவளைத்து சிறுமியை கண்டுபிடித்து, அவரிடம் வாக்குமூலத்தை பெற்ற பின்னர், தும்மல்லசூரிய பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

சிறுமியை அழைத்துச் சென்றதாக கூறப்படும் இளைஞனை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சிறுமியை திருமண வைபவத்திற்கு அழைத்துச் சென்ற இளைஞர் கடந்த 16ஆம் திகதியில் இருந்து 20ஆம் திகதி வரை இரவு

நேர களியாட்ட விடுதியில் தங்க வைத்துள்ளதாகவும், இதன் காரணமாக தான் ஏனைய பெண்களுடன் இணைந்து நடனமாட நேரிட்டதாகவும் சிறுமி, பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

அத்துடன் இரவு நேர களியாட்ட விடுதிக்கு வந்த நடுத்தர வயதான நபர், சிறுமியை பாலியல் செயல்களுக்காக பணியாளர் ஒருவரிடம் விலைக்கு கேட்டதாகவும், பணியாளர் சிறுமியை நடுத்தர வயதான நபருக்கு கொடுக்க முயற்சித்த போது ஏனைய ஊழியர்கள் அதனை எதிர்த்ததாகவும் சிறுமி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதனடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுத்த பொலிஸார் இரவு நேர களியாட்ட விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படும் 5 பெண்களையும்,
10 ஊழியர்களையும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.