இந்தியாவுக்கு இஸ்ரோ, அமெரிக்காவுக்கு நாசா, ரஷ்யாவுக்கு ராஸ்காஸ்மோஸ் (Roscosmos) போல, உலகம் முழுவதும் 70 நாடுகள் தங்களுக்குச் சொந்தமாக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் (Government Space Agencies) உள்ளதாக 2015-ம் ஆண்டின்போது தெரிவித்திருக்கின்றன. இவற்றுள் 14 நிறுவனங்கள், சொந்தமாக ராக்கெட் ஏவும் தளங்களை வைத்துள்ளன.
மனிதர்கள் பயணம்செய்வது போல கலங்கள் தயாரிப்பவை 4 நிறுவனங்கள் என்றாலும், அதில் நிலவில் மனிதர்களைச் சரியாக இறக்கிவிடும் வசதிகள்கொண்ட நிறுவனங்கள் 3 மட்டுமே. உலக நாடுகளின் ஒட்டுமொத்த விண்வெளி ஆராய்ச்சித் திறன்களை எண்ணிவிடலாம். ரஷ்யா, சீனா, அமெரிக்கா, தற்போது இந்தியா போன்ற நாடுகள், விண்வெளியில் சாதனைகள் பல புரிந்துகொண்டிருக்கும் நிலையில், மற்றுமொரு முன்னேறிய நாடும் விண்வெளி கோதாவில் இறங்க உள்ளது.
ஆஸ்திரேலியா, தனக்கென நிறைய சாட்டிலைட்கள் வைத்திருந்தாலும், அவற்றை விண்வெளியில் செலுத்த மற்ற நாடுகளின் உதவியைத்தான் இதுவரை நாடிவந்தது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முன்னேற்ற அமைப்பில் (OECD) இடம்பெற்றிருக்கும் 35 நாடுகளில், ஆஸ்திரேலியா உட்பட இரண்டு நாடுகளுக்கு மட்டுமே சொந்தமாக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இல்லை. இப்போது, ஆஸ்திரேலியா இந்தக் குறையை நிவர்த்திசெய்யும் வகையில், சொந்தமாக விண்வெளி நிறுவனம் ஒன்றை திறக்க முடிவுசெய்துள்ளது.