மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி, தள்ளாடி இராணுவ முகாமிற்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட சடலம் இனங்காணப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மரணம் கொலையா? அல்லது தற்கொலையா என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இராணுவ முகாமில் இருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் உள்ள காட்டு பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் காணப்படுவதாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் பொலிஸார் உடல் முழுவதும் எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த இடத்திற்கு மன்னார் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் – தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அந்தோனி தாஸ் குரூஸ் (வயது-54) என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் உறவினரொருவர் தெரிவிக்கையில்,
சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தாழ்வுபாட்டு கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து மன்னார் நகரிற்கு வந்தார்.
பின்னர் அன்றைய தினம் இரவு வீடு திரும்பாத நிலையில், நேற்று காலை முதல் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினோம் என கூறியுள்ளார்.
அத்துடன் குறித்த மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.