இலங்கையில் யுத்த காலத்தில் ராணுவத்தால் பல ரகசிய முகாம்கள் நடத்தப்பட்டதாகவும், அதில் பல தமிழ் இளைஞர், யுவதிகள் தடுத்து வைக்கப்பட்டு வதைக்கப்பட்டதாகவும் ஏற்கனவே பல சர்ச்சைகள் எழுந்திருந்தன. இந்நிலையில், தற்போது திருகோணமலையில் மற்றுமொரு சித்திரவதை முகாம் இயங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
கடந்த 2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் கடத்தப்பட்ட 11 தமிழ் இளைஞர்கள் திருகோணமலை கன்சைட் நிலத்தடி சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு வதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கன்சைட் முகாமிலிருந்து 100 மீற்றர் தொலைவில் மற்றொரு சித்திரவதை முகாம் இயக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த அதிகாரியும், விசாரணை பொறுப்பதிகாரியுமான நிசாந்த சில்வா, இவ்விடயத்தை நேற்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படையைச் சேர்ந்த இருவரது வாக்குமூலத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் நிசாந்த சில்வா மன்றில் தெரிவித்துள்ளார்.
குறித்த முகாமில் இந்த 11 இளைஞர்கள் அல்லாத, பிறிதொரு தரப்பினரே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் எனவும் அவர்கள் தொடர்பான தகவல்களை ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் சித்திரவதை கூடங்கள் என எவையும் இயக்கப்படவில்லையென இலங்கை அரசாங்கம் கூறி வந்தாலும், அவ்வாறான இடங்கள் காணப்பட்டமைக்கான ஆதாரங்கள் தொடர்ந்தும் வெளிவந்தவண்ணமுள்ளன. குறித்த முகாம்கள் தொடர்பில் பல சர்வதேச அமைப்புகளும் தகவல்களை வெளியிட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.