வித்தியா படுகொலை: பரபரப்பின் மத்தியில் நாளை தீர்ப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு நீதாய விளக்க நீதிபதிகளால் நாளைய தினம் அறிவிக்கப்படவுள்ளது.

புங்குடுதீவு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலை சென்ற  மாணவி சிவலோகநாதன் வித்தியா கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் 9 பேர் எதிரிகளாக இனங்காணப்பட்டனர்.

வித்தியா படுகொலை: பரபரப்பின் மத்தியில் நாளை தீர்ப்பு

அந்த வகையில் முதலாம் எதிரியான பூ.இந்திரகுமார், 2 ஆம் எதிரியான பூ.ஜெயக்குமார், 3 ஆம் எதிரியான பூ.தவக்குமார், 4 ஆம் எதிரியான ம.சசிதரன், 5 ஆம் எதிரியான நி.சந்திரகாந்தன்,  6 ஆம் எதிரியான சி.துசாந்தன், 7 ஆம் எதிரியான ப.குகநாதன், 8 ஆம் எதிரியான ஜெ.கோகிலன்,  9 ஆம் எதிரியான ம.சசிகுமார் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றச்சாட்டு பத்திரம் யாழ் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கை  நீதாய விளக்க நீதிமன்றில்  (ட்ரயலட்பார்) விசாரணை செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் பரிந்துரை செய்ததையடுத்து, பிரதம நீதியரசரால் நீதாய விளக்க நீதிமன்றுக்கு மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.

அந்த வகையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்க மன்று யூன் மாதம் முதன்முறையாக யாழ் மேல் நீதிமன்றில் கூடியது.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியை   பலாத்காரம் செய்யும் நோக்கத்துக்காக கடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டியமை, பலாத்காரம் செய்யும் நோக்கத்துக்காக கடத்தியமை, கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்தமை, கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்து கொலை செய்தமை போன்ற பிரதான குற்றங்களும், மேற்குறித்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட 41 குற்றச்சாட்டுக்கள் எதிரிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டது.

இதில் 9 ஆம், 4 ஆம் எதிரிகளுக்கு எதிரான பிராதான குற்றச்சாட்டாக, வித்தியாவை பலாத்காரம் செய்யும் நோக்கத்துக்காக கடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டியதாக குற்றம்  சாட்டப்பட்டிருந்தது.

2 ஆம், 3 ஆம், 5 ஆம் 6 ஆம் எதிரிகளுக்கு எதிராக மேற்குறித்த நான்கு பிரதான குற்றச்சாட்டுக்களும் சாட்டப்பட்டிருந்தன.

7 ஆம் 8 ஆம் எதிரிகளுக்கு  எதிராக மேற்குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு உடந்தையாக இருந்துள்ளதாக பிரதான குற்றச்சாட்டுக்களாக முன்வைக்கப்பட்டது.

மேற்குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு தாம் சுற்றவாளிகள் என 9 எதிரிகளும் மன்றுரை செய்திருந்தனர்.

அதனையடுத்து கடந்த யூன் மாதம் 28 ஆம் திகதியில் இருந்து நீதாய விளக்க நீதிபதிகள் மூவர் முன்னிலையில் விளக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

வழக்கு தொடுநர் தரப்பு எதிரிகள் தரப்பு சாட்சியங்கள் என அனைத்து சாட்சியங்களின் விசாரணைகள் முடிவுறும் வரை ஒவ்வொரு முறையும் மன்றில் எதிரிகள் 9 பேரும் ஆயர்படுத்தப்பட்டனர்.

அனைத்து விசாரணைகளும் கடந்த செப்ரம்பர் மாதம் 13 ஆம் திகதி முடிவுற்றிருந்த நிலையில் நாளைய தினம் குறித்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.