இலங்கையில் ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தை பௌத்த பிக்குகள் சுற்றி வளைத்ததை அடுத்து அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 32 ரோஹிஞ்சா அகதிகளும் காவல் துறையினரின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஐ.நா அகதிகள் ஆணையத்தின் பராமரிப்பில் இலங்கை தலைநகர் கொழும்புக்கு வெளியில் உள்ள கல்கிசை பகுதியில் பெண்கள், குழந்தைகள் உட்பட 32 ரோஹிஞ்சா அகதிகள் இரண்டு அடுக்கு வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அந்த இடத்தை இன்று, செவ்வாய்க்கிழமை, காலை முற்றுகையிட்ட பௌத்த பிக்குகள் இவர்களை அங்கிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது.
தற்போது பல்லாயிரக்கணக்கில் மியான்மரில் இருந்து அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமைடையும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தங்கள் நாட்டில் மியான்மர் ராணுவத்தினரும் பௌத்தர்களும் நடத்தும் தாக்குதல்களைப் பற்றிப் புகார் கூறுவது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதிகளே அங்கு தங்கியிருப்பதாகக் கூறி அவர்களை வெளியேற்ற வேண்டும் என பௌத்த பிக்குகள் சத்தமிட்டனர்.
அதனையடுத்து ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக அங்கு விரைந்த காவல் துறையினர், அகதிகளை தங்கள் பாதுகாப்பில் பொறுப்பேற்று அழைத்து சென்றுள்ளனர்.
கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக அகதிகளாக தமது நாட்டை விட்டு வெளியேறி வந்த ரோஹிஞ்சா அகதிகள் இந்தியத் தலைநகர் புது டெல்லியிலும் பின்னர் தமிழ் நாட்டிலும் தங்கியிருந்தனர்.
இந்தியாவிலிருந்து வேறொரு நாட்டிற்கு படகு பயணம் மேற்கொண்டிருந்த வேளை இந்த வருடம் ஏப்ரல் மாதம் 30 ம் திகதி இலங்கை கடற் பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீரிகான சட்ட விரோத குடியேற்றக்காரர் தடுப்பு முகாமில் இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
மல்லாகம் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் பராமரிப்பின் கீழ் இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்ததாக அவர்களின் நலன்களை கவனிக்கும் மனித உரிமைகள் சட்டத்தரணியான சிராஸ் நூர்டின் தெரிவிக்கின்றார்.
இவர்களுக்கு பிறிதொரு நாட்டில் அரசியல் புகலிடம் பெற்றுக் கொடுக்கும் முயற்சிகளில் ஐ.நா அகதிகள் ஆணையம் ஏற்கனவே ஈடுபட்டுள்ளது. அதுவரையில் அவர்கள் இலங்கையில் தங்கியிருப்பதற்கு இலங்கை அரசும் அனுமதி வழங்கியுள்ளது.
இவர்களுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குகள் குழுவிற்கு தலைமை வகித்ததாக கூறப்படும் அக்மீமன தயாரத்ன தேரோ. ரோஹிஞ்சா முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்கின்றார்.
ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு ஆதரவாக இலங்கையில் ஏற்கனவே முஸ்லிம்கள் குரல் எழுப்பி வருவதோடு அவர்களுக்கு நீதி கோரி ஆர்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை மியான்மர் அரசுக்கு தமது ஆதரவை வெளியிட்டு கடும் போக்கு பௌத்த அமைப்புகளும் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.