அவுஸ்திரேலியாவின் மனுஸ் மற்றும் நவுறு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளில் 25 பேர் அமெரிக்காவில் குடியேற்றுவதற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் இன்று காலை அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
பப்புவா நியு கினியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொதுமக்கள் விவகார அதிகாரி பெவெர்லி தக்கர் இதனை உறுதிசெய்துள்ளார்.
அது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “அடுத்து வரும் சில வாரங்களில் மேலும் 25 பேரை அமெரிக்காவுக்கு அழைத்து செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையிலான அரசாங்கத்தின் போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுகின்றனர்.
எவ்வாறாயினும், அமெரிக்காவில் எத்தனை அகதிகளிற்கு இடமளிக்கப்படும் என்பது குறித்து எந்த தகவலையும் வெளியிடப்போவதில்லை” என பெவெர்லி தக்கர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் மனுஸ் மற்றும் நறுவு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 200க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டவர்களில் இலங்கை அகதிகளும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.