மசூதியில் பெண் தீவிரவாதி நடத்திய தற்கொலை தாக்குதல்

நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள மசூதியில் இன்று போக்கோ ஹரம் தற்கொலைப்படையை சேர்ந்த பெண் தீவிரவாதி நடத்திய மனிதகுண்டு தாக்குதலில் 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சரிசமமான எண்ணிக்கையில் வாழ்ந்து வரும் நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டதிட்டத்துக்கு உட்பட்ட அரசை நிறுவ வேண்டும் என்று கூறி ஒரு பிரிவினர் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபகாலமாக தற்கொலைப் படை தாக்குதலுக்கு இவர்கள் பெண்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். நைஜீரியா நாட்டின் போர்னோ மாநில தலைநகரான மைடுகுரி நகரில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

mm

இந்நகரின் மத்திய பகுதியில் உள்ள திக்வா பகுதியில் பிரபலமான மசூதி ஒன்றுள்ளது. (உள்ளூர் நேரப்படி) நேற்று அதிகாலை சுமார் 5.00 மணியளவில் இந்த மசூதிக்குள் ஒரு பெண் தீவிரவாதி உடல் முழுவதும் வெடிகுண்டை கட்டிக்கொண்டு புகுந்தார். அந்தப் பெண் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை திடீரென்று வெடிக்க வைத்தாள். இதில், அந்த பெண்ணின் உடல் பாகங்கள் சின்னாபின்னமாக தெறித்து சதை துண்டங்களாக பறந்து விழுந்தன. இந்த தாக்குதலில் ஐந்து பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். படுகாயமடைந்த மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மசூதிக்குள் தாக்குதல் நடந்த அதே வேளையில் மைடுகுரி நகரின் மற்றொரு பகுதியில் சந்தேகத்திடமான வகையில் சுற்றித்திரிந்த ஒரி பெண்ணிடம் ராணுவத்தினர் சோதனை நடத்த முயன்றனர். அப்போது அந்த பெண் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்ததில் அப்பெண் உடல்சிதறி பலியானார். இந்த தாக்குதலில் வேறு எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை

இந்த தாக்குதலின் காரணமாக அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இன்னும் சில தீவிரவாதிகள் பதுங்கியிருக்ககூடும் என்ற தகவலையடுத்து அப்பகுதியில் போலீசாரும், ராணுவத்தினரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதே மைடுகுரி நகரில் உள்ள மோலை கொலேமரி பகுதியில் போக்கோஹரம் தற்கொலைப் படையை சேர்ந்த 4 பெண் தீவிரவாதிகள் கடந்த ஜூலை மாதம் நடத்திய மனிதகுண்டு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.