சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை தொடர்ந்து உணவகங்களில் பரிமாறப்படும் உணவுகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது
நாளை (27) முதல் இவ்விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக, நாடு முழுவதிலுமுள்ள உணவகங்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ள அச்சங்கம், நுகர்வோருக்கு உயர்தரத்திலான உணவுகளை நியாய விலையில் வழங்குவதே தமது நோக்கமாக இருக்கின்றபோதிலும், அந்நோக்கத்தை ஈடுசெய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. உணவு தயாரிப்பதற்கு பிரதானமாக எரிவாயுவை பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள சங்கம், சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து உணவுகளின் விலைகள் அதிகரிப்பதை தம்மால் கட்டுப்படுத்த முடியாத காரணியாக காணப்படுவதாக தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில் உணவுகளின் உச்சபட்ச விலைகளை குறிப்பிட்ட அளவில் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அதிகரிக்கப்பட்ட உணவுகளின் விலைகள் வருமாறு தேநீர் கோப்பை – ரூபா 20பால் தேநீர் – ரூபா 40அப்பம் (ஆப்பம்) – ரூபா 15சோற்று பொதி – ரூபா 130 இவ்விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவிப்பதற்கும், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதோடு, அத்தியவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பை தடுக்கும் வகையிலான உடனடி நடவடிக்கையை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.