இத்தாலியப் பெண் ஒருவர் தன்னைத் தானே ‘மணந்து’ ஆச்சரியப்படுத்தியுள்ளார். ‘சோலோகமி’ என்ற, தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் ஒரு புதிய முறை சில நாடுகளில் இடம்பெற்று வருகின்றன.
அதன்படி, இத்தாலியைச் சேர்ந்த லோரா மெஸி (40) என்ற இந்த உடற்பயிற்சி நிபுணர், சாதாரண திருமணங்களைப் போலவே வெள்ளை ஆடை அணிந்து, கேக் வெட்டி தனது திருமணத்தைக் கொண்டாடினார்.
அவரது திருமணத்துக்கு விருந்தினர்கள் எழுபது பேரும் சமுகமளித்துள்ளனர்.
“துணை இல்லாமலேயே திருமணம் செய்துகொள்ளலாம். முதலில் நம்மை நாம் காதலிக்க வேண்டும். எல்லாப் பெண்களின் கற்பனைக் கதைகளிலும் இராஜகுமாரன் வரவேண்டும் என்று அவசியமில்லை” என்று தத்துவமாகப் பேசுகிறார் லோரா!
லோராவின் பன்னிரண்டு வருடக் காதல் கடந்த சில வருடங்களுக்கு முன் முறிந்தது. அன்று முதல், தன்னை ஏமாற்றாத ஒரு நல்ல துணையைத் தாம் எதிர்பார்த்ததாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் திட்டம் தோன்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார் லோரா!
எதிர்காலத்தில் தன்னைக் கவரும் ஒரு ஆண் கிடைத்தால் அவரைத் திருமணம் செய்துகொள்வேனென்றும், எவ்வாறெனினும், தன்னுடைய சந்தோஷம் அவரைச் சார்ந்து இருக்காது என்றும் லோரா தெரிவித்துள்ளார்.