பால்கர் மாவட்டம் விரார் கிழக்கு காஸ்கோப்ரி பகுதியை சேர்ந்தவர் சோம்நாத்(வயது22). இவரது நண்பர் ஆனந்தா. இவர் சோம்நாத்துக்கு மும்பை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.60 ஆயிரம் வாங்கியிருக்கிறார். அந்த பணத்தை சோம்நாத் தனது தந்தையிடம் இருந்து கடனாக வாங்கி, ஆனந்தாவிடம் கொடுத்து உள்ளார். ஆனால் ஆனந்தா விமான நிலையத்தில் வேலை வாங்கிக்கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்.
இதனால் சோம்நாத் மிகுந்த விரக்தி அடைந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சோம்நாத் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த விரார் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தரையில் கிடந்த அவரது செல்போனை எடுத்து போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அவர் தூக்கில் உயிருக்கு போராடியபடி தொங்கும் ‘செல்பி’ புகைப்படம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதமும் போலீசாரிடம் சிக்கியது. அதில், தனது இந்த முடிவுக்கு ஆனந்தா தான் காரணம் என குறிப்பிட்டு இருந்தார். மேலும் தனது தந்தையிடமும் மன்னிப்பு கேட்டு எழுதி இருந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.