யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் 11வது எதிரியின் விடுதலை எப்படி சாத்தியமானது ?

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த படுகொலை வழக்கில் ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய நீதாய தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

v2இதன் போது, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத 1வது மற்றும் 7வது சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். அத்துடன், குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 7 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது

மேலும், குறித்த ஏழு பேருக்கும் தலா 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், குற்றவாளிகள் ஒவ்வொருவரும் வித்தியா குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தனர்

இந்த படுகொலை வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே இருவர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். நேற்றைய தினம் மேலும் இருவர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அந்த ஒருவர் யார்? அவருக்கு என்ன நடந்தது என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டுள்ளது

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி வித்தியா படுகொலை வழக்கில் 11வது சந்தேகநபராக உதயசூரியன் சுரேஸ்கரன் கைது செய்யப்பட்டிருந்தார்.

11ஆவதாக கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர், மாணவி வித்தியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படும் போது காவல் காத்ததாக குற்றப்புலனாய்வு பிரிவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில், உதயசூரியன் சுரேஸ்கரனின் விடுதலை எவ்வாறு சாத்தியமானது? என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் போது நீதிபதிகள் அரச தரப்பு சாட்சியத்தினை அழுத்தமாக கூறியிருந்தனர்

.அந்த அரச தரப்பு சாட்சியே 11வது சந்தேகநபராக கைது செய்யப்பட்டிருந்த உதயசூரியன் சுரேஸ்கரன். இவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு வந்த நிலையில், வழக்கின் திடீர் திருப்பமாக உதயசூரியன் சுரேஸ்கரன் அரச தரப்பு சாட்சியமாக மாறியிருந்தார்

இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி யாழ்.ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 12 சந்தேகநபர்களில் 11ஆம் இலக்க சந்தேகநபர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளதாக நீதிபதி ஏ.எம்.எம்.ரியாழ் அறிவித்திருந்தார்.அரச தரப்பு சாட்சியாளராக மாறும் பட்சத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமையவே 11வது இலக்க சந்தேகநபர் அரச தரப்பு சாட்சியாளராவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்

இதன் அடிப்படையிலேயே குறித்த நபருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, வித்தியா படுகொலை வழக்கு மிக விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படுவதற்கு அரச தரப்பு சாட்சியும் ஒரு காரணம் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.