குர்திஸ்தான் பகுதியை சுதந்திர நாடாக ஆக்க வடக்கு ஈராக் மக்கள் அமோகமாக ஆதரவு

குர்திஸ்தான் பகுதியை சுதந்திர நாடாக ஆக்க வடக்கு இராக் மக்கள் அமோகமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். திங்கள்கிழமை நடைபெற்ற சர்ச்சைக்குரிய கருத்து வாக்கெடுப்பில் சுதந்திர குர்திஸ்தான் கோரிக்கைக்கு பெருவாரியான ஆதரவு கிடைத்துள்ளது.

kur1

3.3 மில்லியன் குர்து மற்றும் குர்து அல்லாத வாக்காளர்களில் 92 சதவீதம் பேர் குர்திஸ்தான் பிரிவினையை ஆதரிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கருத்து வாக்கெடுப்பு முடிவுகளை ரத்து செய்யும்படி இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி விடுத்த கடைசி நேர கோரிக்கையையும் மீறி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பிரிந்துபோவதற்குப் பதில், அரசமைப்புச் சட்டத்தை வடிவமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் குர்துக்கள் ஈடுபடவேண்டும் என்று அல்-அபாதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தனி நாட்டுக்கு ஆதரவான இந்த வாக்களிப்பு, பாக்தாத்தில் உள்ள மத்திய அரசுடனும், அண்டை நாடுகளுடனும் பிரிவினை பேச்சுவார்த்தை நடத்தும் உரிமையைத் தங்களுக்கு வழங்கும் என குர்து தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே குர்து படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் வளம் மிக்க ‘கிர்குக்’ உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு ராணுவத்தை அனுப்புமாறு அந்நாட்டு நாடாளுமன்றம் பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

பல்வேறு இனத்தவர் வாழும் கிர்குக் பகுதி மீது அராபியர்களால் ஆளப்படும் பாக்தாத் மத்திய அரசும், குர்துக்களும் உரிமை கொண்டாடுகின்றனர். தற்போது குர்திஷ் பேஷ்மேர்கா போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது கிர்குக்.

குர்திஸ்தான் பகுதியைச் சேர்ந்த மூன்று இராக்கிய மாகாணங்களிலும், இப் பகுதியின் நிர்வாகத்துக்கு வெளியே உள்ள குர்திஸ்தான் பகுதிகளிலும் கருத்து வாக்கெடுப்பு நடந்தது.

“28,61,000 பேர் சுதந்திர குர்திஸ்தானுக்கு ஆதரவாகவும், 2,24,000 பேர் அதற்கு எதிராகவும் வாக்களித்தனர்; வாக்களிக்க உரிமை உள்ளவர்களில் 72.61 சதவீதம் பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர்,” என்று இர்பிலில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தேர்தல் ஆணைய அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்த வாக்கெடுப்புக்கு இராக்கில் உள்ள மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஐ.எஸ். படைக்கு எதிரான போரை இது பலவீனப்படுத்துவிடும் வாய்ப்பு குறித்து சர்வதேச சமூகம் கவலை தெரிவித்து வருகிறது.

குர்திஸ்தான் பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள குடிமக்களைப் பாதுகாப்பதே தமது முன்னுரிமை என்று பிரதமர் அபாதி தெரிவித்துள்ளார்.

“அரசமைப்புச் சட்டத்தின் பலத்துடன் கூடிய இராக்கின் ஆட்சியை இப் பகுதியின் எல்லா மாவட்டங்களிலும் அமல்படுத்துவோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இர்பில் மற்றும் சுலைமானியா விமான நிலையங்களின் கட்டுப்பாட்டை வெள்ளிக்கிழமைக்குள் பாக்தாத்திடம் ஒப்படைக்காவிட்டால், குர்திஸ்தான் பகுதிக்கு நேரடியாக இயக்கப்படும் சர்வதேச விமானங்களைத் தடுக்கப் போவதாக மீண்டும் கூறியுள்ளார் அபாதி.

ஏற்கெனவே இராக்கி சிவில் விமான ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இரண்டு விமான நிலையங்களை அவர்களிடம் நாங்கள் எப்படி ஒப்படைப்பது என்று கேட்டுள்ளார் குர்திஸ்தான் வட்டார அரசின் போக்குவரத்து அமைச்சர் மௌலுத் முர்தாத்.

இந்த கருத்து வாக்கெடுப்பால் “மிகவும் ஏமாற்றமடைந்துள்ள” அமெரிக்கவும் சர்வதேச விமானங்களை தடுக்கப்போவதாக அபாதி விடுத்துள்ள மிரட்டலை கேள்வி கேட்டுள்ளது.
மத்திய கிழக்கில் குர்துக்கள் நான்காவது பெரிய மக்கள் தொகை உடைய மரபினம். எனினும் அவர்களுக்கென ஒரு நிரந்தர தேசிய அரசும் இல்லை. இராக் மக்கள் தொகையில் குர்துக்கள் 15 முதல் 20 சதவீதம் பேர் உள்ளனர்.

1991ல் இராக்கில் உள்ள தங்கள் பகுதிக்கு தன்னாட்சி உரிமை பெறும் வரையில் அவர்கள் பல பத்தாண்டுகளாக ஒடுக்குமுறைகளை சந்தித்துவந்தனர்.