தற்போதுள்ள சூழ்நிலைக்கு அமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை துரித கதியில் அப்புறப்படுத்துவது பொருத்தமானதல்ல என இராணுவ தளபதி லெப்பிடினட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 10ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள இராணுவத்தின் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இராணுவ கொடிக்கு தலதா மாளிகையில் இன்று நடத்தப்பட்ட பூஜையில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
அரசியல்வாதிகள் பல கருத்துக்களை வெளியிட முடியும். எனினும் நாட்டின் தேசிய மற்றும் அரச பாதுகாப்பு தொடர்பில் அரச மட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென் பகுதி மக்கள் தொடர்பான புரிதலை பெற்றுக்கொள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் கண்டிக்கு வந்து சென்றது தொடர்பாக மகிழ்ச்சியடைகிறேன்.
வடக்கு முதலமைச்சர் கூறுவது போல் ஒரு லட்சத்து 80 ஆயிரம் படையினர் வடக்கில் இல்லை. நாட்டின் தேவைக்கு அமைய வடக்கில் படையினர் நிலை நிறுத்தப்பட வேண்டும்.
இலங்கை படையினரின் பலம் பற்றிய தகவல்களை மறைக்க முடியாது. இராணுவம் என்பது அரச நிறுவனம் என்பதால், அதில் சம்பளம் பெறுவோரின் விபரங்கள் திறைசேரியிலும் பாதுகாப்பு அமைச்சிடமும் உள்ளன. இதனால், வடக்கு, கிழக்கில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் படையினர் இல்லை.
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு, முப்படையினர், பொலிஸ், சிவில் பாதுகாப்பு படை ஆகிய நிறுவனங்களுக்கு இருப்பதால், அந்த நிறுவனங்கள் முடிவுகளை எடுக்கும்.
படையினர் சாதாரண மக்களுடன் பேரிடவில்லை. அவர்கள் பயங்கரவாதிகளுடன் போரிட்டனர் எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.