தனது மூத்த மகள் மலியாவைப் பல்கலைக்கழகத்தில் வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டபின் தன்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
“அந்த உணர்வு இதயத்தைத் திறந்து அறுவை சிகிச்சை செய்வதைப் போல இருந்தது,” என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தன் மகளை இறக்கிவிட்ட அந்தத் தருணத்தைப் பற்றி அவர் கூறியுள்ளார்.
“அவள் முன்பு நான் அழவில்லை என்பது எனக்குப் பெருமையாக இருந்தது,” என்று அவர் கூறியுள்ளார்.
“ஆனால், பல்கலைக் கழகத்திலிருந்து திரும்பி வரும்போது, ரகசியப் பாதுகாப்புப் பிரிவினர், நான் உணர்ச்சிவசப்பட்டு, மூக்கை தேய்த்து சிந்திய போது நான் எழுப்பும் ஒலிகளைக் கேட்காதது போல, நேராகப் பார்த்தபடி இருந்தனர்” என்றார் ஒபாமா.
ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது, துணை அதிபராக இருந்த ஜோ பைடனின் மறைந்த மகனின் பெயரில் நிறுவப்பட்டுள்ள தொண்டு நிறுவனமான ‘போ பைடன் ஃபவுண்டேஷன்’ சார்பில், திங்களன்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் ஒபாமா இந்த சம்பவத்தை விவரித்துள்ளார்.
“நாம் வாழ்க்கையில் எதைச் சாதித்து இருந்தாலும், நம் வாழ்வின் இறுதியில் நம் குழந்தைகள் நமக்கு அளிக்கும் மகிழ்ச்சியையே நாம் நினைவு கூர்வோம். பின்னர் நம் பேரக் குழந்தைகள் அளிக்கும் மகிழ்ச்சியையும் நினைவு கூர்வோம் என்று நம்புகிறேன்,” என்று அந்த நிகழ்வில் ஒபாமா பேசினார்.
19 வயதாகும் மலியா பள்ளிப்படிப்பை முடித்து ஓராண்டு இடைவெளி எடுத்துக்கொண்டதன் பின்னர், தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க முடிவு செய்துள்ளார்.
இதற்கு முன்பு, பல சமயங்களிலும் ஒரு தந்தையாக இருப்பது தனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஒபாமா பேசியுள்ளார்.
“நான் இதுவரை செய்துள்ள எல்லா விஷயங்களிலும் மிகவும் பெருமைக்குரியதாகக் கருதுவது, உங்களுக்கு தந்தையாக இருப்பதே,” என்று தன் அதிபர் பதவிக்கலாம் நிறைவடைந்தபோது நடைபெற்ற பிரியாவிடை பெறும் நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில், தன் மகள்களை நோக்கி அவர் கூறினார்.
வாஷிங்டன் டி.சியில் உள்ள தங்களின் புதிய வீட்டில், தன் பெற்றோருடன் வசிக்கும், 16 வயதாகும் ஒபாமாவின் இளைய மகள் சாஷா இன்னும் தன் பள்ளிப் படிப்பைத் தொடர்கிறார்.