ஸ்ரீலங்காவின் தலை நகர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்தின் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்

ஸ்ரீலங்காவின் தலை நகர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்தின் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பேருந்தின் ஓட்டுநர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

normal-busses-in-sri-lanka

இந்த சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,

இம்மாதம் 23ஆம் திகதி இரவு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நிறைந்த பயணிகளுடன் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. இதன்போது நள்ளிரவு 12.20 மணியளவில் புத்தளம் நாகவில்லு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஓட்டு நர்மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்

இதன்போது ஓட்டுநர் நிலை தடுமாறிப்போனார். இதனால் மிகவேகமாக வந்துகொண்டிருந்த பேருந்து பாரிய விபத்தைச் சந்திக்கும்வகையில் தளம்பிக்கொண்டிருந்தது. இருப்பினும் சடுதியில் ஓட்டுநர் சுதாகரித்து பேருந்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்

இந்த திடீர் தாக்குதலினால் படுகாயமடைந்த சாரதி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் புத்தளம் மாவட்டம் ஆராச்சிகட்டுவ, பிரதேசத்தை சேர்ந்த கே.ஏ.தனுஷ்க திஷான் ஜயரத்ன என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த திடீர் தாக்குதலுக்கான காரணம் சொல்லப்படவில்லையாயினும் தனிப்பட்ட விரோதமாகவும் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனுடன் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு தாம் தயாராகி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்