நலம் தரும் நவராத்திரி விரத வழிபாடு

சக்தி வழிபாட்டால் சஞ்சலம் தீர்க்கும் மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரி விழாவை விரதமிருந்து கொண்டாடினால் நலம் யாவும் வந்து சேரும்.

Navarathiri-_-நவராத்திரி

புரட்டாசி மாதம் ஒரு புனிதமான மாதமாகும். கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும் இம்மாதத்தில் பெண் தெய்வ வழிபாட்டால் பெருமை சேரும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே சக்தி வழிபாட்டால் சஞ்சலம் தீர்க்கும் மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரி விழாவை விரதமிருந்து கொண்டாடினால் நலம் யாவும் வந்து சேரும்.

ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் மூல காரணமாக விளங்கும் தெய்வங்களான சிவன், பிரம்மா, விஷ்ணுவின் துணைவியர்களான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய தெய்வங்களை பூக்கொண்டும், பாக்கொண்டும் வழிபட்டால் பிரச்சினைகள் அகலும். தனவரவும் கூடும். வாழ்க்கையில் வெற்றி வாய்ப்புகள் பெருகிக்கொண்டேயிருக்கும். அந்த அடிப்படையில் உருவானதுதான் நவராத்திரி விழா.

சிவனுக்கு உகந்தது “சிவராத்திரி”. அதேபோல அம்பிகையைக் கொண்டாட உகந்தநாள் “நவராத்திரி”யாகும். “நவம்” என்றால் “ஒன்பது” என்று பொருள். “ராத்திரி” என்றால் “இரவு” என்று பொருள். ஒன்பது இரவுகளில் அம்பிகையைக் கொண்டாடி, விரதம் இருந்து வழிபட்டு வந்தால் பொன், பொருள்கள் குவியும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

அந்த திருநாள் தான் புரட்டாசி மாதம் 5-ம் நாள் 21.9.2017 அன்று நவராத்திரி விழா ஆரம்பமாகிறது. அன்று முதல் இல்லங்களிலும், ஆலயங்களிலும் கொலு வைக்கத் தொடங்குவர். 28.9.2017 அன்று துர்க்காஷ்டமி, 29.9.2017 அன்று சரஸ்வதி பூஜை, 30.9.2017 அன்று விஜயதசமி நிகழ்வோடு நவராத்திரி முடிவடைகிறது. இந்த நாட்களில் முப்பெரும் தேவியை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப் பெறும்.

ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் மூன்றும் இருந்தால்தான் கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக் கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும். எனவே தான் “வீரம்” தரும் துர்க்காதேவியை முதல் மூன்று நாட்களும், “செல்வம்” தரும் லட்சுமியை அடுத்த மூன்று தினங்களும், “கல்விச் செல்வம்” தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களும் முறையாக பூஜை செய்து வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அங்ஙனம் வழிபட்டால் இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற தொடங்கும் என்பது முன்னோர் வாக்கு.

தேவியின் அருள் கிடைக்கத் தேவர்கள் கடும் தவம் செய்தனர். இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளின் பேரருளையும் பெற பிரயாசை எடுத்தனர். தேவர்கள் உடலை அசைக்காமல் தவம் செய்த நாட்களில் எல்லா வஸ்துகளும் அசையாமல் இருந்தன. அதன் நினைவாக கொலு வைத்துக் கொண்டாடுகிறோம்.

கொலு படிகள் அமைக்கும் முறை :

கொலுபடிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்கவேண்டும். படிக்கட்டுகளில் வெள்ளை அல்லது மஞ்சள் நிற துணிகளை விரித்து வைக்க வேண்டும். முதல் படிக்கட்டில் கலசத்தை வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒவ்வொரு விதத்தில் அலங்காரங்கள் செய்து நவரத்தின மாலைகள் மற்றும் மலர் மாலைகள் சூட்டி வழிபட வேண்டும். அதுபோல் பராசக்தியை ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாக அலங்கரித்துக் கொண்டாட வேண்டும்.

நைவேத்தியப் பொருட்களான வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கடலை, பொறி, தேங்காய், பழங்கள் போன்றவற்றை வைத்து வழிபட வேண்டும்.

கொலுவைக்கும் பொழுது முதல் படியில் ஓரறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைக்க வேண்டும்.

இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகளின் பொம்மைகள், சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும். மூன்றாவதுபடியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம்மைகளை வைக்கவேண்டும்.

நான்காவது படியில் நான்கு அறிவுகொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகள், ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் பொம்மைகள், ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகள், ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம்பெறச் செய்யவேண்டும். எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் அவர்களின் துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரின் உருவங்களையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடு நாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும். படிப்படியாக முன்னேறப் படிகளிலே கொலுவைத்து வழிபடவேண்டும்.

இந்த “நவராத்திரி” விரத வழிபாட்டினால் நல்ல வாழ்க்கை அமையும். வெற்றியும், செல்வமும் வீடு தேடி வரும்.