துமிந்த சில்வாவின் மூளையில் பாரிய பாதிப்பு – 9 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழு பரிந்துரை

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மூளையில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 9 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழுவொன்று பரிந்துரை செய்துள்ளது.

duminda_silva_mp_28_01_2015

துமிந்த சில்வாவின் உடல்நிலை தொடர்பில் சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என சிறப்பு மருத்துவ குழுவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

துமிந்த சில்வாவின் உடல்நிலை தொடர்பில் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

நீதிமன்ற பரிந்துரைக்கு அமைய கொழும்பு தேசிய மருத்துவமனையின் ஒன்பது சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினால் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பரிசோதனையின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், துமிந்த சில்வா தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சை பெறவேண்டிய நிலையில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார சேவை பிரதிப்பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஜாசிங்கவின் கையொப்பத்துடன் கொழும்பு மேல் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜீ.ஏ.ஆர்.ஆட்டிகலவுக்கு அனுப்பப்பட்டுள்ளது,

இந்த அறிக்கைக்கு அமைய, மருத்துவர்கள் குழுவினரால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சீ டீ ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவரின் மண்டை ஓடு மற்றும் மூளையில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவரது மண்டை ஓட்டின் உடைந்த செதில்கள் மூளையின் முன்பகுதியில் தங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதுடன், மூளையின் சில பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

துமிந்த சில்வாவின் மூளையில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாற்றங்கள் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த நோய்கள் மேலும் தீவிரமடைவதற்கான சந்தர்ப்பங்களும் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, துமிந்த சில்வாவிற்கு சாதாரணமாக நடமாடுவதில் சிரமத்தன்மை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, துமிந்த சில்வா தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.