நாளை யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்க சுவரொட்டிகள் மூலம் அழைப்பு…

புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவை கூட்டு பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தி கொலை செய்த குற்றவாளிகளை காப்பாற்ற உதவியர்களை தண்டிக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் நாளை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

sda

அடையாளம் தெரியாத நபர்களினால் யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளில் அந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 7 சந்தேக நபர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டு மணர தண்டணை விதிக்கப்பட்டிருந்தது.

வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் தலைவமையில் யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி ஆகிய மூவர் அடங்கிய நீதாய மன்றம் நேற்று முன்தினம் அந்த தீர்ப்பை வழங்கியிருந்தது.

இந்த தீர்ப்பை வித்தியாவிற்காக நீதிகோரி போராடியிருந்த பலரும் வரவேற்றிருந்த போதிலும், படுகொலைச் சம்வம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேக நபர்களை தப்பிக்க வைப்பதற்கு அரசியல் தரப்பினர் மற்றும் அரச அதிகாரிகள் முயற்சித்தாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் வித்தியா படுகொலை வழங்கின் தீர்ப்பில் சந்தேக நபர்களை தப்பிக்க வைப்பதற்கு முயற்சித்தமை தொடர்பாக தகவல்களை நீதிபதி மா.இளஞ்செழியன் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், கொலை செய்த குற்றவாளிகளை காப்பாற்ற உதவியர்களை தண்டிக்குமாறு வலியுறுத்தி யாழ் நகர் முழுவது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

நேற்று நள்ளிரவு  இனந் தெரியாத நபர்களினால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் கொலைக் குற்றவாளிகளை தப்பிக்க உதவியவர்களுக்கும் குற்றவாளிகள், வித்தியாவிற்கு நீதிவேண்டும் போன்ற வாசகங்கள் அந்த சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருந்தன.

வித்தியா கொலை வழங்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட சுவிஸ்குமார் என அழைக்கப்படும் சசிகுமாரின் புகைப்படத்துடன், சட்டத்தரணி வீ.ரி.தமிழ்மாறன் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் புகைப்படங்களும் அதில் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

வித்தியா வழக்கில் மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.மணிவண்ணனும் சந்தேக நபர்களை தப்பிக்க வைத்தவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என கூறியிருந்தார்.