கூழாவடி ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த அமலஸ் ஜெயதீபா என்பவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒன்று இறந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை தரப்பிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த பெண் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒன்றை காவு கொடுத்து விட்டு ஒற்றைக் குழந்தையோடு வீட்டுக்கு சென்றுள்ளார்.
பல சிரமங்களின் மத்தியில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கு பின்னர் உருவான குழந்தைகளில் ஒன்றையே பறிகொடுத்துள்ளார்.
கருத்தரித்த நாளில் இருந்து தெடர்ந்து ஒன்பது மாதங்களும் மருத்துவ பரிசோதனைக்காக சென்ற நிலையில் குழந்தைகளுக்கோ தாய்கோ பரிசோதனைகளின் போது எந்த ஒரு பிரச்சினையும் இல்லை மிக ஆரோக்கியமாகவே இருப்பதாக வைத்தியர் கூறியுள்ளார்.
18.09.2017 இரவு 10 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வீட்டில் பன்னீர்குடம் உடைந்த நிலையில் இரவு 10.30 மணிக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் 21ம் இலக்க பிரசவவிடுதியில் அனுமதிக்கப்பட்டார்.
உடனேயே பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனாலும் அவருக்கு பிரசவம் நிகழவில்லை தொடர்ச்சியாக பிரசவ வேதனையோடு காத்திருந்தார்.
ஆனாலும் மேலதிக சிகிச்சை எதுவும் வழங்கப்படாது தொடர்ச்சியாக 21 மணித்தியாலங்கள் காக்கவைக்கப்பட்டார.
அதன் பின்னரும் ஏதும் செய்யாத விடுதி வைத்தியரிடம் என்னால் ஏலாமல் இருக்கின்றது எனக்கு சத்திர சிகிச்சை செய்து குழந்தையை பிரசவியுங்கள் என்று இரந்த கேட்டுக் கொண்டதன் பின்னர் தான் 19.09.2017 இரவு 7.30 மணிக்குத்தான் சீசர் செய்யப்பட்டது.
பிறந்த குழந்தையில் ஒன்று மூச்சு விடுவதற்கு சிரமப் படுவதாக கூறி பேபி றுமில் விசேட கவனிப்பில் வைத்திருந்தார்கள.
ஆனாலும் குழந்தை 26.09.2017 காலை 10.30 மணிக்கு அக் குழந்தை இறந்துவிட்டது.
ஆரோக்கியமாக பிறந்த குழந்தை திடீரென இறந்ததற்கு சரியான காரணம் வைத்தியர்களால் சொல்லப்படவில்லை நல்லூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணையிலும் பிணப் பரிசோதனை அறிக்கையின் படியும் குழந்தைக்கு நோய் தொற்று ஏற்பட்டு இறந்து போனதை உறுதிப்படுத்த முடிந்தது.
இந்நிலையில் நல்லூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி இந்த சம்பவம் தொடர்பில் பல கேள்விகளை யாழ் போதனா வைத்தியசாலை தரப்பிடம் கேட்டுள்ளார்.
1. பன்னீர்குடம் உடைந்து எவ்வளவு நேரத்தித்குள் பிரசவம் நிகழவேண்டும் சுகப் பிரசவத்திற்கு எவ்வளவு நேரம் காத்து இருக்கலாம்?
2. பிரசவம் காலதாமதம் ஆனதால் தான் ஒரு குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதா?
3. நோய் தொற்று ஏற்படும் அளவிற்கு பேபிறுமை வைத்திருந்தது சரியா?
4. எந்தவிதமான நோய் தொற்று என்று கண்டுபிடித்து சிகிச்சையளிக்காமல் போனது ஏன்?
5. எதிர்காலத்தி இந்த பேபிறுமால் எத்தனை குழந்தைகளின் உயிரை காவுகொள்ளப்போகின்றது.
6. ஒரு வைத்திய நிபுணர்கள் தனியார் மருத்துவமனையித்தான் நான் பிரசவம் பார்ப்பேன் போதனா வைத்தியசாலையில் பிரசவம் பார்க்க மாட்டேன் என்று கூறுவதற்கு அதிகாரம் உள்ளதா?
என்று கேள்வியெழுப்பியதுடன் பொதுமக்களை விழித்துக்கொள்ளுமாறு நல்லூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி கோரியுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
நேற்றையதினம் பிரசவத்திற்காக நயினாதீவு 5 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட நிறைமாதக் கர்ப்பிணியான கரன் அமுதவல்லி எனும் பெண் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த பெண் பிரசவத்திற்காக குறித்த அறையில் இருந்தபோது குழந்தையை வெளியெடுப்பதற்காக வைத்திய உபகரணங்களை பயன்படுத்தி வைத்தியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் குழந்தை பிரசவம் நடைபெற்ற பின்னர் தாயிற்கு தையல் போடும் போது திடீர் என தாய் சுயநினைவற்று சென்றுள்ளார்.
செய்வதறியாது திகைத்த மருத்துவர்கள் உடனடியாக தாயை சத்திர சிகிச்சை கூடத்திற்கு மாற்றியுள்ளனர்.
அவசர சூழ்நிலையில் உயிரை காப்பாற்ற விடுதியில் போதுமான வசதிகள் முன்னேற்பாடாக செய்து வைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
பிரசவ விடுதி அமைந்த 2ம் மாடியிலிருந்து பாரம் தூக்கி மூலம் இறக்கப்பட்டு சத்திரசிகிச்சை கூடத்திற்கு திடீர் என கொண்டுசெல்லப்பட்ட பெண்ணிற்கு அங்கே நின்ற வைத்தியர்கள், தாதியர்கள் மூலமே உயிர் காக்கும் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீண்ட நேர இடைவெளியின் பின்னர் தாயின் உயிரை மீட்டெடுத்த வைத்தியர்கள் மேலதிக பராமரிப்பிற்காக ICU விற்கு மாற்றியுள்ளனர்.
நேற்றுமுன்தினம் பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவமானது நேற்று மதியம் 2 மணியளவில் பெண்ணின் இறப்புடன் பூதகரமாக வெளியாகியுள்ளது.
இதில் பெண்ணின் இறப்பிற்கு காரணம் உடனடியான கவனிப்புக்களான CPR ஆரம்பிப்பதற்கு தாமதமானமையால் மூளைக்கு செல்லவேண்டிய குருதியின் அளவு குறைவடைந்தமையே ஆகும்.
சில வைத்தியர்களின் கருத்துப்படி நீண்டநேரம் சுகப்பிரசவத்திற்காக காத்திருக்கும் தாய்மார்களில் 10 ஆயிரம் பேரில் ஒருவரிற்கே இதுபோல மரணம் சம்பவிப்பதாகவும், சரியான முன்னேற்பாடுகள் இருப்பின் நிச்சயமாக காப்பாற்றலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே இம்மரணத்தையும் நாம் சாதாரணமாக எடுத்துவிட முடியாது. ஏனெனில் கொல்லப்பட்டவரின் கணவர் அதே வைத்தியசாலையில் நீண்டகாலமாக சேவையாற்றிவரும் ஒரு தாதிய உத்தியோகஸ்தர் ஆகும்.
மற்றும் இதுவே அவர்களுடைய முதல் குழந்தையுமாகும்.ஒரு வைத்தியசாலை ஊழியரின் மனைவிக்கே இந்நிலையா என்பது உறவினர்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை உண்டுபண்ணியுள்ளது.