மகள் வயதை ஒத்த தன்ஷிகாவை ராஜேந்தர் பெருந்தன்மையோடு மன்னித்திருக்கலாம் – விஷால் கண்டனம்

‘விழித்திரு’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை தன்ஷிகா இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தருக்கு நன்றி தெரிவிக்க மறந்துவிட்டார்.

461604-vishal

அதனைத் தொடர்ந்து பேசிய டி. ராஜேந்தர், விழித்திரு படத்தில் தன்ஷிகா நடித்த பிறகு தான் கபாலி படத்தில் நடிக்க தன்ஷிகாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் சூப்பர் ஸ்டாருடன் நடித்தவுடன் தன்னை மறந்துவிட்டதாக நடிகை தன்ஷிகா மீது டி.ராஜேந்திர் கடுமையான விமர்சனத்தை வைத்தார்.

உடனே குறுக்கிட்டு பேசிய தன்ஷிகா ‘தவறுதலாக உங்களின் பெயரை குறிப்பிட மறந்துவிட்டேன் எனவும், உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்’ எனக்கூறியும் டி.ராஜேந்தரின் காலை தொட்டு மிகவும் வருத்தத்துடன் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு டி.ராஜேந்தரோ, “நீ Sareeயே கட்டிட்டு வரல அப்புறம் என்ன Sorry கேக்குற” என்று சொல்லி அவரின் மன்னிப்பை வெறுப்புடன் பேசி தன்ஷிகாவை பேசாவிடாமல் மறித்தார்.

டி.ராஜேந்தரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், டி.ராஜேந்தருக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில், ‘ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன். டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே. நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டிஆர் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் சாய்தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய்தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விஷாலின் அறிக்கையில், “ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய்தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி வேண்டுமென்றே அவமரியாதை செய்யும் குணம் கொண்டவர் அல்ல என்பதையும் அறிவர்.

அவர் மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்திய டிஆர் அவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.