சிறுமி துஸ்பிரயோகம்; தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் பாரிய குற்றங்களில் ஈடுபட்டோர்க்கு எவ்வாறான தண்டனைகள் எல்லாம் வழங்கப்பட்டிருந்தன என்ற பேச்சுக்கள் மக்கள் மத்தியில் பரவலாக இடம்பெற்றுவரும் நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நடந்த பாலியல் துஸ்பிரயோக சம்பவம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட சாவொறுப்பு எனப்படும் மரணதண்டனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

images (1)

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கடந்த 2006 ஆம் ஆண்டு வன்னிப்பகுதியில் ஆறு வயதுச் சிறுமி ஒருவர் 67வயதான நபர் ஒருவரினால் துஸ்பிரயோகத்திற்குள்ளானார். துஸ்பிரயோகப்படுத்திய அந்த நபர் சிறுமியைப் பற்றைக்குள் கைவிட்டுவிட்டு தப்பியுள்ளார்.

பின்னர் சிறுமியைத் தேடிவந்த உறவினர் உடனடியாக அச் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்தனர். பின்னர் இந்த விடயம் தமிழீழ காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டு காவல்துறை விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

சிறுமியின் எதிர்காலம்குறித்து காவல்துறை விசாரணைகள் அனைத்தும் இரகசியமாகவே நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஆனாலும் சந்தேக நபரின் தரப்பிலிருந்து குறித்த சிறுமியின் குடும்பத்திற்கு தொடர் அச்சுறுத்தல்கள் வந்துகொண்டிருந்ததனால் குறித்த முறைப்பாடு காவல்துறையினரிடமிருந்து வாபஸ் பெறப்பட்டது.

பின்னர் இந்த விடயத்தினை மீண்டும் கவனத்திற்கெடுத்த காவல்துறையினர் குறித்த சம்பவம் தொடர்பாக தமிழீழ நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணைகள் குறுகிய காலத்துள் நடத்தப்பட்டு சம்மந்தப்பட்ட நபரின் குற்றம் எந்தவித சந்தேகத்திற்கிடமுமின்றி நிரூபிக்கப்பட்டது.

பின்னர், சிறுவர் பாலியல் பலாத்கார குற்றவாளியாக இனம்காணப்பட்ட குறித்த நபருக்கு பத்துவருடம் கடூளியச் சிறைத்தண்டனையுடன் சிறுமிக்கான நட்ட ஈடும் வழங்கவேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தமிழீழ நீதிமன்றம் ஒன்றில் இவ்வாறான தண்டனை ஒன்று வழங்கப்பட்டமை குறித்து தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு தெரியவந்தது. உடனடியாக அப்போதைய அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனை அழைத்து இந்த வழக்கினை மீண்டும் நீதிமன்றுக்கு எடுக்கவேண்டும் என்றும் தமிழீழ குற்றவியல் முறைச் சட்டத்தில் திருத்தத்தினை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அதன்படி விடுதலைப்புலிக்ளின் மகளிர் பிரிவுத் தலைவர்கள் (தளபதிகள், அரசியற்துறைப் பொறுப்பாளர்கள்) மற்றும் அரசியற்துறைப் பொறுப்பாளர்களுடன் சட்டத்திருத்தம் தொடர்பான அவசர சந்திப்பு நடைபெற்றிருந்தது. இதில் தலைவர் பிரபாகரன் அவர்களின் துணைவியாரும் கலந்துகொண்டார்.

இதன்படி பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டத்தில் முக்கியமான திருத்தம் ஒன்று உருவானது. அதாவது பதினாறு வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை அவர்களது விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினால்; குற்றம் நிரூபிக்கப்பட்டால் அது மரணதண்டனைக்குரிய குற்றமாகும் என உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் தமிழீழ குற்றவியல் முறைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்பின்னர் குறித்த துஸ்பிரயோக வழக்கு மீண்டும் தமிழீழ நீதிமன்றில் எடுக்கப்பட்டு குற்றம் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருந்ததனால் முதல் கொடுத்த தண்டனையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி குறித்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. குறித்த தீர்ப்பினை உடன் அமுலுக்குக் கொண்டுவரும் வகையில் விஸ்வமடு பிரதேசத்தில் பொதுமக்கள் முன்னிலையில் வைத்து சாவொறுப்பு தண்டனை வழங்கப்பட்டது.