தாழ்வு மனப்பான்மை என்னும் விஷம்.

ஒரு மனதில் தாழ்வு மனப்பான்மையென்னும் மாயப் பிசாசு குடி கொள்வதற்கு பல்வேறு காரணங்களுண்டு. அவற்றுள் முக்கியமானதாகச் சில உண்டு.

download (1)மூத்தோர்களைக் காரணமாகக் குறிப்பிடலாம். தங்கள் முன்னோர்களையும், தங்களையும் மட்டுமே மனத்தில் கொண்டு, அடுத்தடுத்து வரும் சந்ததியினரின் அறிவையும், திறமையையும் குறைத்து மதிப்பிட்டு, போதிய கல்வியறிவையும், பொது அறிவையும் வளர்க்கத் தவறுவதால் தங்கள் வாரிசுகள் மனத்தில் தாழ்வு மனப்பான்மை விஷம் தாராளமாகப் பரவுவதற்கு அவர்களே காரணமாகின்றனர்.

பொருளாதாரச் சூழ்நிலை பொதுவாகவே, அவமானத்திலும், ஏளனத்திலும் வளரும் குழந்தைகளுக்குக் குற்ற உணர்வும், தாழ்வுணர்ச்சியும் இயற்கையாகவே வந்து விடுகின்றது. பொருளாதார ஏற்றத்தாழ்வானது மேல் மட்டத்திலிருப்பவன், கீழ் மட்டத்திலிருப்பவனிடம் சற்று ஆக்கரமிப்புடனும், அவமானப்படுத்தும் நோக்கத்துடனுமே இருக்கச் செய்கின்றது. அங்ஙனம், ஆக்கிரமிப்பும், அதிகாரத் தோரணையும் பாயும் போது கீழ் மட்டத்திலிருப்பவன் அவமானத்தை உணர்கின்றான். அச்சூழ்நிலையில் தன்னைப் பற்றி தாழ்வு எண்ணங்களே அவனுக்குள் விரிகின்றன. அதன் உடனடி விளைவு தாழ்வு மனப்பான்மையின் பிறப்பாகும்.

 

சுய மனத்தடைகள் “நம்மால் முடிந்தது இவ்வளவுதான், இதற்கும் மேல் நமக்கு வேண்டாம்” “நம் தலையெழுத்து இதுதான்”. “வேறு வழியில்லை எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்.” போன்ற சுய மனத்தடைகள் இடப்படும் உரங்களாகும்.

முந்தைய தவறுகளின் தாக்கம், தவறுகள், என்பது தனக்கு மட்டுமே சொந்தமானது, தன்னைத் தவிர யாருமே தவறு செய்வதில்லை தான் எது செய்தாலும் தவறாகவே முடிகின்றது என்று நினைத்துக் கொண்டு, அந்தத் தவறுகளின் தாக்கத்தினால் அடுத்த அடி எடுத்து வைப்பதில் ஏற்படும் சஞ்சலங்களும், தயக்கங்களும் தாழ்வு மனப்பான்மை குணம் பிறக்க வழி வகுக்கின்றன.

கல்வியறிவு பற்றிய கவலை “மற்றவர்களைவிட நாம் குறைந்த அளவே படித்திருக்கின்றோம். அதனால் நம் கருத்துக்களும், செயல்பாடுகளும் நிச்சயம் சிறப்பு வாய்ந்தவைகளாக இருக்காது” என்ற எண்ணம் தாழ்வு மனப்பான்மையின் சின்னம். அனுபவ அறிவிலும் கூட அவ்வாறே. அனுபவசாலிகள் முன்பு தான் கூறும் எந்தக் கருத்தும் நிறைவானதாக இருக்காது என்ற தவறான எண்ணம் சிறந்த செழுமையான எண்ணங்களின் உற்பத்தியையே முடக்கி வைக்கிறது.

தாழ்வு மனப்பான்மையை தகர்ப்போம்

ஊக்க வார்த்தைகளின் தட்டுபாடு, சுற்றியுள்ளவர்களின் பேச்சும், செயல்பாடுகளும் ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்திருப்பின் ஒருவன் செயல் வெற்றியை எளிதில் அடைந்து விடுகின்றது. அதை விடுத்து, அவன் ஒய்ந்து சாயும் தருணம் பார்த்து, அதைச் சாதகமாக்கிக் கொள்ள முனையும் சிலரிடமிருந்து வெளிப்படும் எதிர்வினை ஊக்குவிப்புகள் தாழ்வு மனப்பான்மை விதையை விதைத்து தோல்விப் பயிரை அறுவடை செய்கின்றது.

 

தாழ்வு மனப்பான்மையைத் தகர்க்கும் வழிகள்

பெற்றோர்களின் வார்த்தைகளில் நேர்வினை ஊக்குவிப்பு மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். அது பிள்ளைகளை நேர்வழிப்படுத்தி, நிமிர, வைக்கிறது. தங்களுக்குக் கிடைக்காத பல அரிய சந்தர்ப்பங்களைத் தம் சந்ததியினருக்கு ஏற்படுத்தித் தருவதன் மூலம் அவர்கள் தம் எதிர்காலச் சந்ததியினரை இமயத்தின் உயரத்திற்கு ஏற்றி வைக்கின்றனர்.

அடுத்து, பொருளாதார நிலைமைகளைப் பொருட்படுத்தாது உயரிய எண்ணங்களையும், செயல்களையும் அதன் போக்கில் செல்ல வழி விடும்போது தாழ்வு மனப்பான்மையானது தவிடுபொடியாகிறது.

எல்லாச் சூழ்நிலைகளிலும், நாம் செய்கின்ற காரியங்களும் சரி, செய்யப் போகின்ற காரியங்களும் சரி, நமது திறமைக்கும், அறிவுக்கும் மிகச் சாதாரணமானவை, என்ற எண்ணம் அவ்வேலையைச் சுலபமாக்கி விடுவதோடு தாழ்வு மனப்பான்மையையும் குழி தோண்டிப் புதைத்து விடுகின்றன.

தாழ்வு மனப்பான்மையை தகர்ப்போம்

தவறு என்பது பொதுவான ஒன்று. அது எல்லோருக்கும் இயல்பாக ஏற்படுகின்ற ஒன்று, என்ற எண்ணம் மேலோங்க வேண்டும். ஒரு தவறானது அடுத்து வரவிருக்கும் வெற்றிக்கு வழிவகுக்கிறது என எண்ணினால் தவறுகளின் தாக்கத்தினால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மைதாக்கப்பட்டு விடும்.

கல்வியறிவும், அனுபவ அறிவும், நமது எண்ணங்களையும் செயல்பாட்டையும் கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக இருப்பது தவறாகும். கல்வியறிவு மட்டுமே சீரிய சிந்தனைகளைத் தரும், அனுபவ அறிவு மட்டுமே அறிவார்ந்த செயல்களைத் திட்டமிடும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத கூற்று. எல்லா மனத்திலிருந்தும் ஏற்றச் சிந்தனைகள் உரிய காலத்தில் தாமாக வெளிப்படும்.

மற்றவர்களின் வார்த்தைகள் நமது செயல்பாட்டை எதிர்வினையாகப் பாதிக்கா வண்ணம் சாமர்த்தியமாகத் தவிர்ப்பது தாழ்வு மனப்பான்மையைத் தாக்கி, வெற்றித் திலகத்தை நெற்றியில் சூட்டும்.

 

மொத்தத்தில் இளைய சமுதாயத்தினரின் போக்கையும், வெற்றியும் தீர்மானிப்பதில் தாழ்வு மனப்பான்மை எண்ணங்களே முதலிடம் பெறுவதால் அவற்றை மேற்கூறிய வழிகளில் முறியடித்து வெற்றிக் கொடியை சிகரத்தின் உச்சியில் ஏற்ற முனைந்தால், நமக்கு அடுத்து வரும் சந்ததியினர் சிகரத்தின் மேல் சிம்மாசனம் இடுவர் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை.