ஒன்றிரண்டு மணித்தியாலங்களிலேயே உலகத்தைச் சுற்றிவருவதற்கான புதிய தொழி நுட்பம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதற்காக உலகத்திலிருக்கக்கூடிய எந்தவொரு நாட்டிற்கும் ஒரு மணித்தியால நேரத்தில் பயணிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய விண்ணோடம் ஒன்றை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பினை SpaceX’s நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் Elon Musk அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இடம்பெற்ற சர்வதேச விண்வெளி மாநாட்டில் உரையாற்றியபோது குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி மணித்தியாலம் ஒன்றுக்கு, 27 ஆயிரம் கிலோமீட்டர் கதியில் இந்த விண்ணோடம் பறக்கும் எனவும், இதனால் லண்டன் நகரிலிருந்து டுபாய்க்கு 27 நிமிடங்களில் பயணம் செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி, ஒரு மணிநேரத்தினுள் உலக நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்தை நிறைவு செய்யமுடியும் முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு மக்கள் பயணிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த திட்டம், எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக பொருத்தமான விண்ணோடங்களைத் தயாரிக்கும் பணிகள் அடுத்த ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர் அதுகுறித்த காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.