இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 100 முச்சக்கரவண்டிகளை அரசியல் ஆதரவாளர்களுக்கு வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
2004 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது, இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்ட 100 முச்சக்கரவண்டிகளை ஜப்பான் வழங்கியிருந்தது.
எனினும் அப்போது அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அரசியல் ஆதரவாளர்களுக்கு வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்ச கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
2004ம் ஆண்டு 100 முச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்ட போதும், அப்போதைய கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக செயற்பட்ட சந்திரசேன விஜேசிங்கவினால் விநியோகிக்கப்படாமல் இருந்துள்ளன.
அரசு கவிழ்ந்து சந்திரசேன விஜேசிங்க அமைச்சு பதவியில் இருந்து விலகும் வரையில் தன்னிடம் வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் 2005ஆம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு வந்த மஹிந்த ராஜபக்சவினால் அந்த அமைச்சு பதவி பீலிக்ஸ் பெரேராவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது குறித்த முச்சக்கர வண்டிகளை மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் மீன் விற்பனை செய்வதற்காக பயன்படுத்தியுள்ளார். அதற்காக 2 லட்சம் ரூபாய் செலவிட்டு மீன்களை நீண்ட காலம் வைத்து கொள்ளும் மேலதிக உபகரணங்களையும் பொருத்தியுள்ளார்.
இதற்கிடையில் ஷிரந்தி ராஜபக்ச, பீலிக்ஸ் பெரேராவிடம் கடிதம் மூலம் முன்வைத்த கோரிக்கைக்கமைய அந்த முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்ட மேலதிக உபகரணங்களை நீக்கிவிட்டு அம்பாந்தோட்டை அரசியல் ஆதரவாளர்களுக்கு வழங்குவதற்காக அவர் அதனை கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் அப்போதைய அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவிடம் வினவிய போது, 2004ஆம் ஆண்டு சுனாமியில் பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வழங்குவதற்காக கடிதம் மூலம் கோரிக்கை வைத்து ஷிரந்தி ராஜபக்ச அதனை கொண்டு சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அந்த முச்சக்கரவண்டிகளுக்கு என்ன நடந்ததென இன்னமும் தகவல் வெளியாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.