அந்தத் தெருப்பாடகி, கொச்சியில் பிரபலம். பெயர் பிரியா சுமேஷ். தெருப்பாடகர்கள், பாடகிகளைப் பார்த்திருப்போம். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்துவிட்டுக் கடந்துவிடுவோம். ஆனால், பிரியாவை சாதாரண தெருப்பாடகி என நினைத்துவிட முடியாது. அவரின் நோக்கம் அவ்வளவு உன்னதமானது. கொச்சியில் தெருத் தெருவாகச் சென்று பாடல் பாடி, அதில் கிடைக்கும் நிதியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு வழங்குவதுதான் இவரின் பணி!
பிரியா, தினமும் மதியம் 12.30 மணி முதல் 4 மணி வரையும், இரவு 7 மணி முதல் 10 மணி வரையும் தெருத் தெருவாகச் சென்று நிகழ்ச்சி நடத்துவார். கணவர் சுமேஷ், அவருக்கு உதவியாக இருப்பார். நாள் ஒன்றுக்கு 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை நிதி திரளும். சில சமயங்களில் 10,000 ரூபாய் வரை கிடைக்கும். சில வேளையில், பெட்ரோலுக்குக்கூட நிதி கிடைக்காது.
குறிப்பிட்ட அளவு நிதி திரண்ட பிறகு, குழந்தையின் வங்கிக்கணக்கில் பிரியா பணம் செலுத்திவிடுகிறார். நிதி வழங்கப்பட்ட குழந்தையின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று, டெபாசிட் செய்த வங்கி ஸ்லிப்பையும் வழங்குகிறார். நிதி திரட்டித் தருவதோடு கடமை முடிந்துவிட்டது என பிரியா ஒதுங்கிவிடுவதில்லை. குழந்தைகள் சிகிச்சை பெறும் மருத்துவர்களையும் சந்தித்து, சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அறிந்துகொள்கிறார்.
இந்த வருடத்தில் மட்டும் ஐந்து குழந்தைகள் உள்பட ஏழு பேரின் புற்றுநோய் சிகிச்சைக்கு நிதி திரட்டி வழங்கியிருக்கிறார். “என் சகோதரி புற்றுநோயால்தான் இறந்தார். புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும். சிகிச்சைக்கு பணம் திரட்ட, நாங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டோம். குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டால், தாங்க முடியாத வலியால் அவதிப்படுவார்கள். குறைந்தபட்ச சிகிச்சை மேற்கொண்டால்தான் ரணமாவது குறையும். நிதி திரட்ட, தெருப்பாடகியாவதுதான் நல்ல வழியாகத் தெரிந்தது. என்னால் அடுத்தவர்களுக்கு உதவ முடிகிறது என்ற மனத் திருப்தியும் கிடைக்கிறது” என்கிறார் பிரியா.
சில சமயம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரே சிகிச்சைக்கு நிதி திரட்டித் தருமாறு கண்ணீர் மல்க கேட்பார்கள். சிலர், அறுவைசிகிச்சைக்கு நாள் குறித்துவிட்டு வந்து நிற்பார்கள். அந்தச் சமயத்தில் பிரியா, டபுள் டூட்டி பார்ப்பதுபோல பம்பரமாகச் சுழன்று நிதி திரட்டுவார். வாக்குறுதி அளித்துவிட்டால் நிறைவேற்றிவிட்டுதான் மறுவேலை. முதன்முதலாக பிரார்த்தனா என்கிற ஒரு வயது குழந்தையின் சிகிச்சைக்கு இரண்டே மாதங்களில் இரண்டு லட்சம் ரூபாய் நிதி திரட்டினார். அதற்குப் பிறகு கொச்சி நகரில் பிரியா பாப்புலராகிவிட, பிரியாவைப் பார்த்தாலே பணம் கொடுத்துவிட்டுப் போகும் மக்களின் எண்ணிக்கை அதிகம்.