இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகப்பெரிய போர் மூழும் அபாய நிலை காணப்படுவதாக ஸ்ரீலங்காவின் முன்னாள் அமைச்சர் திஸ்ஸவிதாரண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் போரானது, சீனா-அமெரிக்கா போராகவும் இதில் இலங்கையும் நேரடித்தாக்கத்துக்குள்ளாகி அழிவினைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, கொழும்பில் ஸ்ரீலங்காவின் முன்னாள் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,
”இந்த அரசாங்கம் வெகு விரைவில் திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்காவுக்கு கையளிக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்தினாலேயே நாட்டின் பாதுகாப்புச் செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்காவிடம் கையளிக்கும் பட்சத்தில் இந்து மா சமுத்திர பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்தின் பிரசன்னமும் நடவடிக்கைகளும் அதிகரிக்கும்.
அதன்பின்னர் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கடும் யுத்தம் ஏற்படும். அதற்கு ஒத்தாசை வழங்குவதற்காகவே இலக்கையின் பாதுகப்புச் செலவுகள் அதிகரிக்கப்பட்டு இராணுவத்தினருக்கான பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” என்று அவர் குறிப்பிட்டார்.