ஆஸ்திரேலியா- அமெரிக்காவிடையே கையெழுத்தாகியிருந்த அகதிகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக 54 அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட இருக்கின்றனர். இவர்களை ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், போரின் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் இல்லையென்றும் அவர்கள் பொருளாதார அகதிகள் என்றும் சித்தரித்திருந்த நிலையில், அக்கருத்தோடு ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் முரண்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்படும் அகதிகள் உண்மையான அகதிகளே என ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார். “உண்மையான அகதிகள் என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையாளர் அங்கீகரித்தவர்களே அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பணம் ஈட்டுவதற்காகவே அவர்கள் இங்கு வந்ததாக ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை பீட்டர் டட்டன் குறிப்பிடும் கருத்தோடு இக்கருத்து முரண்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் 2016 யில் கையெழுத்தான ஆஸ்திரேலியா-அமெரிக்கா அகதிகள் ஒப்பந்தத்தின் படி ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள 1,250 அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் மத்திய அமெரிக்க அகதிகளை ஆஸ்திரேலியாவில் மீள்குடியமர்த்த வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் சுமார் 2000 அகதிகள் நவுரு மற்றும் மனுஸ்தீவில் உள்ள ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சொந்த நாட்டில் உள்ள போர் சூழல் காரணமாக படகு வழியே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தவர்களாவர். இந்த நிலையில், சொந்த நாட்டிற்கே திரும்பி நினைக்கும் அகதிகளுக்கு சுமார் 25,000 டாலர்கள் கொடுக்கவும் ஆஸ்திரேலிய அரசு முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.