LEVC என்று மிகச் சுருக்கமாக அழைக்கப்படும் இலண்டன் மின்சார வாகன நிறுவனம் , வழமையான கறுப்பு டாக்சிகளுக்கு பதிலாக மின்சாரத்தில் இயங்கும் புதிய டாக்சிகளை , ஒக்டோபர் மாதம் அறிமுகம் செய்வதாக செய்திகள் வெளிவந்துள்ளன . இந்த வாகனம் முழுமையான மின்னேற்றலுடன், 70 மைல் தூரம் வரை ஓடும் என்று கூறப்படுகிறது . 1.5 லீட்டர் பெட்ரோலுடன் 400 மைல் தூரம் ஓட முடியும் என்கிறார்கள் .
இதே தொழில் நுட்பம் BMW i3 கார்களில் முன்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் , பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு டாக்சியில் பயன்படுத்தப்படுவது , இதுவே முதல் தடவையாகும் . இலண்டன் நகரச் சூழல் மாசடைவதைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளில் இது ஒன்றாகக் கருதப்படுகின்றது .
அடுத்த ஜனவரி மாதம் தொடக்கம் , தலைநகரில் டீசல் மூலம் ஓடும் டாக்சிகள் தடை செய்யப்படுவதற்கு , இது முன்னோடி நிகழ்வாக அமைகிறது . இந்த மின்சார டாக்சி உற்பத்திகளை மேற்கொள்ள சீனாவே கணிசமான அளவு நிதி முதலீடு செய்துள்ளதுடன் , இலண்டன் நிறுவன உரிமையும் அவர்கள் கையிலேயே இருக்கின்றது.
சராசரியாக ஒரு டாக்சி சாரதி தினமும் 120 மைல் தூரம் வரை பயணிப்பதுண்டு . இந்த நிறுவனத்தின் கணிப்பின்படி , ஐந்தில் நான்கு சாரதிகள் , தங்கள் வாகனத்தை இடை நடுவே ஒரு தடவை மீள் மின்னேற்றம் செய்யவேண்டி வரலாம் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது ..இலண்டன் பிராந்தியத்தில் 24,000 டாக்சிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்பது இங்கே கவனிக்கத்தக்கது