மன்னார் மாந்தை திருக்கேதீஸ்த்தில் அமைக்கப்பட்ட சட்டவிரோத புத்த விகாரை திறப்பதற்கு 29.09.2017 வருகை தர இருந்தீர்கள். அதற்கு எமது சனநாயக ரீதியான எதிர்ப்பை உங்களுக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தோம்.
அதனை ஏற்றுக்கொண்டு விகாரை திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமையினையிட்டு மிகுந்த மன நிறைவடைவதுடன் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுவதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
-இவ்விடையம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு நேற்று(1) கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
-குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
குறித்த விடையத்தில் நீங்கள் காட்டிய சனநாயகப் பெருந்தன்மைக்காக எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சனநாயகமும், இலங்கை அரசியல் அமைப்பும், மத விவகாரங்களும், இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் சமம் என்பதை நீங்கள் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பும் தங்களிற்கு உண்டு.
ஏனெனில் ஒரு சர்வாதிகார தலைமைத்துவத்தை எதிர்த்து சனநாயகரீதியில் தமிழ் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எக்காலத்திலும் பௌத்தர்கள் வசிக்காத இடத்தில் தற்போது வரை எவரும் இல்லாத சூழலில் விகாரையை தனியார் காணியில் அமைந்திருதுப்பது ஒருங்கிணைந்த சமூகமயமாக்கல் நல்லெண்ண செயற்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கக் கூடியதாகவே காணப்படும்.
ஆகவே 29 ஆம் திகதி பௌத்த சாசன அமைச்சர் இந்த நிகழ்வில் கலந்த கொண்டது நல்லாட்சி சனநாயக விழுமியத்திற்கு உகந்த நாகரீகம் அல்ல.
மேட்டிமைவாத அடக்கி ஆளும் சிந்தனைத்துவம் கடந்த காலத்தில் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தியது என்பது நாம் கற்றுக்கொண்ட பாடமாகும். எனவே எதிர்காலத்தில் இந்த சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகின்றோம்.
ஆகவே சனநாயக ரீதியில் நீதிகோரி போராடுவது தவறா? கடந்த ஏழுவருடங்களில் சனநாயக ரீதியான பல்வேறுவிதமான போராட்டங்களும், நீதி கோரிய நூற்றக்கணக்கான கடிதங்களும் பலருக்கு அனுப்பியுள்ளேன் ஆனால் உங்கள் புலனாய்வாளர்கள் தவறு என அவ்வப்போது நிரூபிக்க முனைகிறார்கள் என்பதே வேடிக்கையான வாடிக்கையாகி விட்டது
சனநாயக அடக்குமுறையின் விளைவே கடந்தகால போராட்டம் என்பதும் எமக்கு உணர்த்திய, கற்பிதம் அல்லவா? எனவே சனநாயக ரீதியான எனது போராட்டம் தொடரும் தங்கள் புலனாய்வு அமைப்புக்களின் எத்தகைய விசாரணைக்கும் தயாராகவே இருக்கின்றேன் என்பதனை தங்களுக்கு தயவுடன் அறியத்தருவதுடன் இவ்வாறான சனநாயகச் செயற்பாட்டாளர்களை அடக்க முனைவது சனநாயகப் படுகொலையாகும்.
கடந்த ஆட்சிக்காலத்திலும் இவ்வாறான புலனாய்வு முகவரமைப்புக்களின் தவறான தகவல்களின் பிரகாரம் பல்வேறுவிதமான பின்னடைவுகள் நாட்டிற்கு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது எனவே இவற்றை தாங்கள் சீர்படுத்துவீர்கள் என நம்புவதுடன் தங்கள் பெருந்தன்மைக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.