அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் திடீரென புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 50 பேர் உயிரிழந்தனர். 200 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸிலுள்ள கேசினாவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுவந்தது. இந்த இடத்துக்கு திடீரென துப்பாக்கியுடன் புகுந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். அந்தத் துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஒருவர் கொல்லப்பட்டத்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மற்றொரு மர்ம நபர் மண்டலே பே கேசினோ பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து மெக்கரன் சர்வதேச விமான நிலையத்தில் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. மேலும், இச்சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்த மோசமான துப்பாக்கிசூடு சம்பவமாக கருதப்படுகிறது.