பௌத்த பிக்குகளை வேட்டையாடும் அரசாங்கத்தின் பழிவாங்கும் படலத்தை நிறுத்தாவிட்டால் சமூகத்தில் ஏற்படும் கலவரங்களை நீதிமன்ங்களாலும் தடுத்து நிறுத்தமுடியாது என சிங்கள ராவய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புகலிடம் தேடிவந்த மியன்மார் ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிராக கலவரத்திலும், இனவாத செயற்பாட்டிலும் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்தன தேரர் உட்பட இருவரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்றைய தினம் பகல் கைது செய்யப்பட்ட பின்னர் தேரர், கல்கிஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் வஹாப்தீன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கடந்த 26ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு – கல்கிஸை பகுதியில் ஐ.நாவின் வழிகாட்டலில் இடைத்தங்கல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா அகதிகள் 31 பேரை நாடு கடத்தும்படி வலியுறுத்தி ஒன்றுதிரண்ட கடும்போக்குவாத பிரிவினரும், பிக்குமார்களும் அமைதியின்மையில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற சிங்கள ராவய அமைப்பினி தலைவர் அக்மீமன தயாரத்தன தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவினர் கற்களை வீசி குறித்த இல்லத்திற்கு சேதம் ஏற்படுத்தியதோடு, ரோஹிங்கியா அகதிகள் சிலரை தாக்குவதற்கு முயன்ற காணொளிகளும் ஊடகங்களில் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து பல அமைப்புக்களில் இருந்தும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு குவிந்ததை தொடர்ந்து, இதில் சம்பந்தப்பட்டவர்களில் ஐவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்தன தேரர் கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டதுடன் விசாரணையின் நிறைவில் அவர் உட்பட மேலுமொருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இருவரும் கல்கிஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட சிங்கள ராவய அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் மெடில்லே பஞ்ஞாலோக தேரர், பௌத்த பிக்குகளின் உரிமைகளை நல்லாட்சி அரசாங்கம் பறித்து வரும் செயற்பாடுகளுக்கு எதிராக சமூகத்தில் ஏற்படும் கலவரங்களை எவராலும் தடுக்க முடியாது என்று எச்சரித்தார்.