தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் சேலத்தில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர்.
இதுகுறித்து கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் விநாயகம் அளித்த புகாரின் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம், பகுதி செயலாளர் சரவணன் உட்பட 10 பேரை சேலம் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
துண்டு பிரசுரங்கள் விநியோகித்த காரணத்திற்காக டி.டி.வி.தினகரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் 30 பேர் மீதும் தேசதுரோகம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆகையால் தேசதுரோக வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சென்னை அடையாறிலுள்ள டி.டி.வி.தினகரனின் இல்லத்தில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தொண்டர்கள் குவிந்து வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்வது, செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு, பழனியப்பன் மீதான பழைய வழக்கை தோண்டி போலீஸை விட்டு தேடவிட்டது என தினகரனின் ஆதரவாளர்களை அச்சுறுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.
டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களை மிரட்டுவதற்கு காவல்துறை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சருக்கும் ஆட்சிக்கும் எதிராக டி.டி.வி.தினகரனும் அவரது ஆதரவாளர்களும் பேசாமல் இருப்பதற்காக அவர்கள் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.
அந்தவகையில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்படலாம் என்பதால் அவரது வீட்டின் முன் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் பரபரப்பு நிலவுகிறது.