பாடசாலை வளாகத்தின் உள்ளேயே கஞ்சா பாவிக்கின்ற நிலையா?

யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்களிடையே கஞ்சா பாவனை அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு போதிய முயற்சிகள் எவரும் எடுப்பதில்லை எனவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

baati

யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.

யாழ் மாவட்ட பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் பாடசாலை வளாகத்தின் உள்ளேயே கஞ்சா பாவிக்கின்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.

இது மிகவும் வேதனைக்குரியதும் அதிர்ச்சிக்குரியதுமாகும்.

ஆனால் இதற்கு சரியான தீர்வை எவரும் முன்னிறுத்தாமல் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் எடுக்காமல் செயல்படுகின்றனர்.

அதாவது கஞ்சா பாவித்தால் உடனடியாக பாடசாலை அதிபர் அந்த மாணவனை பாடசாலையை விட்டு இடை நிறுத்துகிறார்.

இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.

மேலும் மாணவர்களுக்கு எங்கிருந்து இந்த போதை பொருட்கள் கிடைக்கின்றன என்பதை இதுவரை பொலிஸார் கண்டுபிடிக்கவும் இல்லை ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுக்கவும் இல்லை.

மீண்டும் மீண்டும் ஒரே பிரச்சனையை கதைப்பதில் பயன் இல்லை. ஆக்கபூர்வமான செயற்பாடுகள் அவசியம் ஆகும்.

மேலும் கோட்டை மற்றும் பேருந்து நிலையம் ரயில் நிலையம் என்பவற்றில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

ஆனால் பொலிஸார் இது தொடர்பில் கண்டு கொள்வதாக தெரியவில்லை. பொலிஸ் காவலரன் அமைக்குமாறு கேட்டிருந்தும் இதுவரை நடைபெறவில்லை.

பொலிஸாருக்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதில் என்ன தடைகள் உள்ளன என எமக்கு தெரியவில்லை.

ஆனால் இந்த விடயம் கவனிப்பாரற்று பாரிய சமூக பின்னடைவுக்கு எம் இளையவர்வளை இட்டு செல்கிறது என குற்றம் சுமத்தியிருந்தனர்.

கஞ்சா தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நேரம் அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில்
முறுகல் நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.