புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.
அறுதிப் பெரும்பான்மையாக சிங்கள பௌத்தர்கள் வாழும் நாட்டில் வரலாற்று ரீதியான இன முரண்பாடுகள் காணப்படுகின்ற ஒரு பின்னணியில் ஜனநாயக விழுமியங்கள் பாதுகாக்கப்படமாட்டாது என்பதனால், இடைக்கால அறிக்கையைத் முற்றாக நிராகரிப்பதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழுகின்ற மக்கள் குழுமங்கள் ஒவ்வொன்றையும் இனரீதியான தனித்துவத்தின் அடிப்படையில் அங்கீகரிக்காமல், இலங்கை மக்கள் அனைவரையும் “ஸ்ரீலங்கர்கள்” என்கின்ற ஒரே அடையாளத்தின் கீழேயே இடைக்கால அறிக்கை கொண்டு வந்துள்ளது.
ஒட்டு மொத்தமான இலங்கை மக்களையும் “ஸ்ரீலங்கர்கள்” என்று அடையாளப்படுத்துவதானது சிங்கள பௌத்த மேலதிக்கத்தை மேலும் பலப்படுத்துவதாக அமையும் என்பதை கடந்த கால வரலாறுகள் உணர்த்தியுள்ளன.
இலங்கைப் பிரஜைகள் என்ற அடிப்படையில் அல்லாமல் தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரத்தின் அடிப்படையிலேயே புதிய அரசியல் யாப்பு அமையவேண்டும் என தமிழ் மக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
எனவே, அரசமைப்பு உருவாக்க முயற்சிகளுக்கு முன்னதாக தமிழர்கள் ஒரு தனித் தரப்பாகவும் ஸ்ரீலங்காக அரசாங்கம் ஒரு தனித் தரப்பாகவும் கொள்ளப்பட்டு,
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தின் ஊடாக, சமூக ஒப்பந்தம் ஒன்று எட்டப்படுவதன் மூலம் மாத்திரமே தமிழ்த் தேசியத்தின் அடிப்படைப் பிறப்புரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என தமிழ் மக்கள் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழ் மக்கள் பேரவையினால் வெளியிடப்பட்ட தீர்வு திட்டத்தில் ஒரு சமூக உடன்பாட்டின் ஊடாக தமிழ்த் தேசத்தின் அங்கீகாரம் உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும், அதன் பின்பே அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ் தேசிய இறையாண்மைப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஒரு சமூக ஒப்பந்தத்தின் ஊடாக மட்டுமே நிரந்தரமான ஐக்கியமும் அமைதியும் பேணப்பட முடியும் என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
அதனால், ஒரு சமூக ஒப்பந்தத்தைச் சாத்தியமாக்குவதற்கு சர்வதேச சமூகம் தலையீடு செய்ய வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.