திருச்சியை அடுத்துள்ள ஜீயபுரம் அருகே உள்ள திருச்செந்துறை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 85 வயதான இவர், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலைசெய்து ஓய்வுபெற்றவர். இவருக்கு கமலா என்கிற மனைவியும் ரகுநாதன், சுப்பிரமணியன் என்ற 2 மகன்களும், அகிலா, மது என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் ரகுநாதன், அகிலா, மது ஆகியோர் மனநிலை சரியில்லாதவர்கள் எனக் கூறப்படுகிறது. இதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தனர். கிருஷ்ணமூர்த்தியின் மூத்தமகன் சுப்பிரமணியன் திருமணமாகி, தனது மனைவி மற்றும் தாய் கமலா ஆகியோருடன் வசித்து வருகின்றார். கிருஷ்ணமூர்த்தி தனது மற்ற பிள்ளைகளான ரகுநாதன், அகிலா, மது ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக கிருஷ்ணமூர்த்தியின் வீடு திறக்காமல் இருந்தது. அந்த வீட்டுக்குப் பால் போடும் பால்காரர், முதல்நாள், கிருஷ்ண மூர்த்தியின் வீட்டின் கதவருகில் வைத்த பால் பாக்கெட் அப்படியே இருந்ததைப் பார்த்து, அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவரும் அப்பகுதி மக்களும் வீட்டின் கதவைத் தட்டிப்பார்த்தனர். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை. பின்னர், ஜன்னல் கதவைத் திறந்து பார்த்ததில் வீட்டின் உள்ளே கிருஷ்ணமூர்த்தி, ரகுநாதன், மது ஆகியோர் வாயில் நுரைதள்ளியபடி சடலமாகக் கிடந்தனர். அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து ஜீயபுரம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு நேரில் வந்த போலீஸார், வீட்டின் உள்ளே சென்று பார்த்ததில், வீட்டின் உள்ளே கிருஷ்ணமூர்த்தி, ரகுநாதன், மது ஆகியோர் மட்டுமல்லாமல், வீட்டின் பின்புறம் அகிலாவும் இறந்து கிடப்பதும், இந்த நான்கு பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அடுத்து 4 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீஸார், உடல்களைப் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், கிருஷ்ணமூர்த்தி, மனநலம் பாதிக்கப்பட்ட தனது மூன்று பிள்ளைகளைக் கவனிக்க முடியாததாலும், அவர்களைப் பராமரிக்க இயலாததாலும், கிருஷ்ணமூர்த்தி தனது பிள்ளைகள் 3 பேருக்கும் சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, பிறகு தானும் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.