‘புவியீர்ப்பு அலைகள்’ இருப்பதை நிரூபிக்க உதவிய, ராய்னர் வெய்ஸ், கிப் தோர்ன், பேரி பேரிஷ் ஆகிய மூன்று அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
புவியீர்ப்பு அலைகள் என்ற ஒன்று இருப்பதாக நீண்ட காலம் முன்பே கணித்தவர் ஆர்பர்ட் ஐன்ஸ்டின்.
100 கோடி ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் இரண்டு பிரம்மாண்ட கருந்துளைகள் மோதிக்கொண்ட காட்சியை உணரவைத்ததன் மூலம் புவியீர்ப்பு அலைகள் இருப்பது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிரூபிக்கப்பட்டது.
உலகம் முழுவதிலும் விஞ்ஞானிகளைப் பரவசப்படுத்தியது இந்தக் கண்டுபிடிப்பு.
பேரண்டத்தை முற்றிலும் புதிய விதத்தில் நோக்குவதற்கான வாய்ப்பை இந்தக் கண்டுபிடிப்பு வழங்கியதாக புகழ்பெற்ற இயற்பியல் வல்லுநர் ஸ்டீஃபன் ஹாக்கிங் அப்போது தெரிவித்திருந்தார்.
விண்வெளியில் உள்ள பிரம்மாண்டமான பொருள்கள் முடுக்கம் பெறும்போது ‘விண்வெளி நேரம்’ எப்படி நீட்சியும், சுருக்கமும் அடைகிறது என்பதை இந்த புவியீர்ப்பு அலைகள் விவரித்தன.
தற்போது நோபல் பரிசு பெற்றுள்ள மூவரும், இந்தக் கண்டுபிடிப்புக்குக் காரணமான லிகோ-விர்கோ விண்வெளி ஆய்வகத்தின் உறுப்பினர்களே.
1901-ம் ஆண்டு முதல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற 204 பேர் பட்டியலில் தற்போது இந்த மூவரும் இணைகிறார்கள்.
நோபல் பரிசுடன் வரும், 9 மில்லியன் க்ரோனர் (8,31,000 பவுண்டு) தொகையில் பாதி வெய்சுக்குத் தரப்படும். மீதமுள்ள தொகையை தார்னும், பேரிஷும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்வர்.