குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை வணங்க நீங்கள் சென்றே ஆக வேண்டும். குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக் கூடியதுதான் குலதெய்வம்.
அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும். ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர். அந்தக் குடும்பத்தினருக்கு அந்த தெய்வம் மிகப் பரிச்சயமானதாக இருக்கும்.
கடந்த காலங்களில் பங்காளிகளுக்குள் ஏற்படும் தகராறுகளை தீர்த்து வைக்கும் இடமாக குலதெய்வக் கோயில்கள் விளங்கின. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக உருவாக்கப்பட்ட குலதெய்வக் கோயில், அவர்களின் சந்ததிகளுக்கு பரம்பரை பரம்பரையாக முழுமுதற் கடவுளாக விளங்குகிறது. அதனால்தான் அந்த சமூகத்தில் எந்த சுபகாரியம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
உதாரணமாக திருமணம் என்று எடுத்துக் கொண்டாலும், முதல் பத்திரிக்கை குல தெய்வத்திற்கு வழங்கப்படுகிறது. இது குழந்தைக்கு முதல் மொட்டை அடிப்பதற்கும் பொருந்தும். ஒரு குழந்தைக்கு, குல தெய்வக் கோயிலில் முதல் மொட்டை அடித்தால், அந்தக் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்று நம்பப்படுகிறது.
தலைமுறைகள் கடந்து வாழும் நம்மில் பலருக்குத் தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல் பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருகிறது. சிவனும் விஷ்ணுவும் பிள்ளையாரும் முருகனும் வழிப்பட்டு தெய்வங்கள் வரிசையில் வருவார்களே தவிர, குலதெய்வ வரிசையில் வருவதில்லை.
குலதெய்வம் என்பது ஸ்ரீராமனை போல் மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை.
ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கீகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது. அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.
இந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள் தோன்றும்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.
குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே வருடத்திற்கு ஒரு முறையாவது பங்குனி உத்திர நாளில் குலதெய்வ கோயிலில் வணங்கினால், வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
எப்போது வழிபடுவது?
கிராம கோவில் திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை திருவிழா நாட்களிலும், குல தெய்வ சிறப்பு பூஜைகளை ஒன்றாக இணைத்து செய்வதுண்டு குடும்பத்தில் நடை பெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேச நாட்களில் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் பழக்கம் இருக்கிறது.
திருமண நிச்சயம் குலதெய்வத்தின் முன்பு நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து ஆட்டு கிடாவெட்டி பொங்கல் வைத்து விழாவை போல சிறப்பாக வழிபாடு செய் கின்றார்கள்.