புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எந்த விதமான அதிகார கட்டமைப்புக்களையும் வழங்காததுடன் பதிமூன்றிலுள்ளதனை (13) மேலும் பலவீனமாக்கியுள்ளதென்பதுடன் வடகிழக்கு இணைப்பில்லாத, சமஷ்டியில்லாத, அதிகார பரவலாக்கமில்லாத, ஓர் அரசியலமைப்புக்கான முன்மொழிவாக அமைந்துள்ளது.
ஆனால் இத்தகைய வரைபு தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் அமையும் என்ற எதிர்பார்க்கையை தமிழ் தரப்பும் சர்வதேச நாடுகளும் வலியுறுத்தி வந்த சந்தர்ப்பத்தில் அதிக ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்படியாயின் இவ்வரைபு யாருக்காக வரையப்பட்டது என்பதை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முதலில் வழிநடத்தல் குழுவின் அறிக்கையில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ள விடயங்களை அவதானிப்போம்.
அதிகாரக் கோட்பாடு, உள்ளுர் அதிகார சபைக்கு அதிக அதிகாரம் பகிரப்படுவதுடன் மாகாண அதிகாரப் பகிர்வின் முதல் நிலை அலகாக இருக்கும் எனக்குறிப்பிட்ட வரைபில் காணி அதிகாரம் முழுமையாக மத்திய அரசாங்கத்திடம் குவிந்திருக்கும் தன்மையையே கொண்டுள்ளது.
காணியுடன் நீர் நிலைகளும் மத்திய அரசாங்கத்தின் கீழ் உட்படுத்தப்படுகின்றன. மேலும் சகல காணிகள், சுரங்கங்கள், ஆள்புல நீர்பரப்புக்கள், சமுத்திரத்திலுள்ள கனியவளங்கள், கண்டமேடைகள், பிரத்தியேக பொருளாதார வலையம் தொடர்பான உரிமைகள் குடியரசுக்கு உரித்தாதல் வேண்டும், அவை மத்திய அரசாங்கத்தின் கீழ் வைக்கப்பட வேண்டும்.
எண்ணெய் நிலங்கள், பெற்றோலியம், அதுசார் பொருட்கள் அடங்கலாக கனியவளங்கள் மீதான அதிக உரிமை மத்தியரசாங்கத்திற்குரியதாகும்.
அரச காணிகளில் நிகழ்த்தப்படும் குடிப்பரம்பல் மாவட்ட, மாகாணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது பிற பிரதேசத்தவருக்கு வழங்கும் வாய்ப்பினை கொடுத்துள்ளது.
காணியற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் போது பிறபிரதேசத்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனக்குறிப்பிடுகின்றமை வட, கிழக்கு குடிப்பரம்பலில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கமாகவே கொள்ளப்பட வேண்டியுள்ளது.
வடக்கு, கிழக்கில் பிற குடியேற்றங்களால் ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நிலை மோசமடைய வாய்ப்பு உள்ளது.
மிகப் பிரதான பிரச்சினையாக வடக்கு, கிழக்கு இணைப்புக்கான கோரிக்கை தமிழரால் மிக நீண்ட காலமாக கோரப்பட்டு வருகிறது.
புதிய வரைபில் விவாதத்திற்குரிய விடயமாக மாகாணங்களின் இணைப்பு கருதப்படுகிறது.
இணைப்புக்கு அரசியலமைப்பு ஏற்பாடு செய்யலாகாது என்பதுடன், இணைப்புக்கு உரிய மாகாணங்களின் மக்கள் தீர்ப்பொன்றுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இவற்றுக்குள் கிழக்கு மாகாணம் தமிழர் அல்லாத பெரும்பான்மை வேறு இனப்பிரிவுகளிடம் உள்ளதென்பதை கருத்தில் கொள்ளும் போது வட, கிழக்கு தனியொரு மாகாணமாக புதிய அரசியலமைப்பின் அங்கீகாரம் சாத்தியமானதா என்ற கேள்வி தவிர்க்க முடியாதது.
புதிய வரைபில் பிரிந்து தனியாக ஓர் அலகு செயல்பட முடியாது என்பதை தெளிவாக வரையறுத்துள்ளது.
இலங்கை அரசு பிரிக்கப்படாதது மற்றும் பிரிக்கப்பட முடியாதது எனக்குறிப்பிட்டுள்ளது. அதே நேரம் அத்தகைய முயற்சியை வாதாடுவது கூட தவறானது எனக் குறிப்பிட்டதுடன், பொது மக்களின் பாதுகாப்புக்குரிய காப்பீட்டினை அரசியலமைப்பு வழங்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாண சபையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 உறுப்பினரையும் பாராளுமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உறுப்பினர்களையும் உள்ளடக்கிய 55 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டாவது சபை உருவாக்கப்படும்.
அதன் சட்டவாக்கத் தத்துவம் பாராளுமன்றத்துடன் சேர்ந்ததாக பார்க்கப்படும். அதாவது சாதாரண சட்டத்தை இரண்டாம் சபை தடுத்து நிறுத்தமுடியாது. அனைத்துக்கும் 2/3 பெரும்பான்மை அவசியமானது. அதிகாரப்பகிர்வையும், அடிப்படை உரிமைகளையும் திருத்தம் செய்ய முடியாது எனவும் குறிப்பிடுகிறது.
தேர்தல் முறைமை கலப்புடையதாக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது. தொகுதிவாரி 140 (60%) உறுப்பினரும் விகிதாசார அடிப்படையில் 93 (40%) உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆட்சித்துறையில் பிரதமர் நிறைவேற்றதிகாரியாகவும் ஜனாதிபதி பெயரளவு பதவி நிலையாளராகவும் விளங்குவார்.
பெண்களுக்கு பாராளுமன்ற உறுப்புரிமையில் முக்கியத்துவம் கொடுப்பதற்கான கலந்துரையாடல் விண்ணப்பம் முன்வைக்கப்பட்டுள்ளது. 50 சதவீதத்திற்கு மேல் பெண்களின் பிரதிநிதித்துவம் எனும் வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய வரைபின் உள்ளடக்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வின் அதிகார பரவலாக்கலை அதிகம் கொண்டிருக்கின்றதா அல்லது 13 ஐ பலவீனப்படுத்தியிருக்கிறதா என்ற வாதம் இயல்பானது.
குறிப்பாக மாகாணங்கள் இணைக்கப்பட முடியாத சிக்கலுக்குள் அரசியலமைப்பு வரைபு நிறுத்தியுள்ளது.
தமிழ் அரசியல் தரப்பினரான தமிழரசுக் கட்சியும் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும், அறிக்கைகளும், பேச்சுக்களும் வடக்கு, கிழக்கு இணைப்பாகவே அமைந்திருந்தது.
அதுவே தமிழர்களின் பூர்வீக நிலம் மீதான அபிலாசையுமாகும். அதனைத் தாங்கியே 1987 இந்திய இலங்கை உடன்படிக்கையும் அமைந்தது. 2007 இல் ஒரு நீதிமன்றத் தீர்ப்பினால் காலாவதியான இணைப்பினை புதிய வரைபு அரசியலமைப்பில் உள்ளடக்க முடிவுசெய்துள்ளது.
ஒற்றையாட்சித் தத்துவத்திற்கு வலுச்சேர்க்கும் விதத்தில் ஏகிய இராஜ்ஜியம் என்பது ஒருமித்த நாடு என்பதாக விபரிக்கப்பட்டுள்ளது.
அப்படியாயின் ஒருமித்த நாடு என்பது சமஸ்டியாக ஏன் அதிகாரப்பகிர்வின் உள்ளடக்கமாக அமைக்கப்படவில்லை? அதிகாரம் அனைத்தும் மத்தியில் குவிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
மாகாண சபைதான் அதிகாரப்பரவலாக்கத்தின் மையமாக உள்ளதெனின் அதன் அதிகாரத்தினை எவ்வாறு பிரிக்கப்படாத நாடு கொண்டிருக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்தவில்லை.
ஆளுனரது அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. காணி அதிகாரம், மாகாண, மத்தி அரசாங்கப் பட்டியல் மற்றும் இரண்டாவது சபை என்பன மத்திய அரசாங்கத்தின் வலுவான முடிபுகளுக்குள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பெயரளவில் அதிகாரம் மாகாண சபைக்கென குறிப்பிட்ட வரைபு ஆளுனர் அதிகாரம் குறைக்கப்பட்டது மட்டுமே நிகழ்ந்துள்ளது.
இதனால் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடுமா என்ற கேள்வி தவிர்க்கமுடியாதது. அரச காணி என்பது அரசியலமைப்பு ஆரம்பிப்பதற்கு உடனடுத்து முன்னராக இலங்கை சனநாயக சோஸலிச குடியரசிற்கு உரித்தாக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள அனைத்துக் காணிகளாகும் மத்திய அரசுக்கு உரித்தானது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பிற்பாடு காணி அதிகாரம் பற்றி மாகாண சபை ஏதும் தனித்துவமாக முடிபுகளை எடுக்க முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது.
பொலிஸ் அதிகாரம் பற்றி எந்த உரையாடலும் புதிய வரைபில் தரப்படவில்லை.
13 ஆவது திருத்தத்தில் இருந்த பொலிஸ் அதிகாரம் முற்றாக கைவிடப்பட்டுள்ளது என்பதுடன் நீர் நிலைகள், ஆழ்கடல்கள், கண்டமேடைகள், விசேட பொருளாதார வலயங்கள் முழுமையாக மத்தியரசுக்குட்பட்டதென்பதுடன் வளங்கள் அனைத்துமே மாகாண எல்லையிலிருந்தாலும் கூட மத்தியரசுக்குரியதாக்கப்பட்ட வரைபாக தரப்பட்டுள்ளது.
எனவே இது ஒரு வரைபில் 13 ஆகவே உள்ளது. வடக்கு, கிழக்கின் மீதான மத்தியரசின் செல்வாக்கை அதிகரிக்கவும் எதிர்காலத்தில் பிரிவினையை தவிர்க்கவும் இத்தகைய முயற்சி என்ற எண்ணத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
மேலும் மேல்மாகாணம் தனித்துவமாக அடையாளப்படுத்தியிருப்பதுடன் கொழும்பு நகரம் மேலும் வலுப்படுத்த வரைபு சிபாரிசு செய்துள்ளது.
மீண்டும் அம்பாந்தோட்டை யுகம் கொழும்பு யுகம் என்பதான போட்டி தென்படுகின்றது. அது மட்டுமன்றி நகரமயப்படுத்தல் கொழும்பை மையப்படுத்திய அதிகார, அபிவிருத்தி, பொருளாதார குவிப்புக்கு புதிய வரைபு வழிவிட்டுள்ளது.
தாராள பொருளாதார, தனியார் பொருளாதார ஊக்குவிப்புக்கான வரைபாகவும் மத்திய அரசினதும் பிரதமரதும் தீர்மானங்களுக்கு அமைவான பொருளாதார அபிவிருத்தியும் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கையும் உருவாக்க கூடிய வரைபாக அமைந்துள்ளது.
ஓர் அரசியலமைப்பானது அந்த நாட்டு மக்களின் உற்பத்தி, பொருளாதாரம், பண்பாடு, வாழ்க்கைமுறை என்பவற்றை அங்கீகரிப்பது மட்டுமன்றி ஒவ்வொரு மனித குலத்தின் இரத்தமும் சதையும், உணர்வுகளும், எண்ணங்களும் சேர்ந்தது என பிரித்தானியாவின் அரசியலமைப்பு சிந்தனையாளர் ஏச்.ஆர்.கிறீவ்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய அமைப்புக்குள் இலங்கையின் புதிய வரைபு இருக்கின்றது என்று ஏற்றுக் கொள்ளமுடியாது. இருப்பவற்றை பாதுகாப்பதென்பது பாராளுமன்ற விவாதத்தின் முடிபுகளில் தங்கியுள்ளது.
எழுத்திலே சொல்லப்பட்டதை கூட ஏற்றுக் கொள்ளாத பாராளுமன்றம் எப்படி விவாதித்து மாற்றத்தை தமிழ் மக்களுக்கு தரும் என்பது பிரதான கேள்வியாகும்.
இது தமிழர்களுக்கு தீர்வொன்றை முன்வைத்துள்ளது என சர்வதேசத்திற்கு காட்ட உதவக்கூடியது அன்றி வேறு ஏதும் இல்லை. இதனால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
அதிகார பரவலுக்கு பதில் அதிகாரக் குவிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனை தமிழ் மக்கள் தவறவிடக்கூடாது என வாதிக்கும் தரப்பினரிடம் ஒரு கேள்வி.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று கூறிவந்தவர்கள் இந்த இடைக்கால அரசியல் அமைப்பு வரைபை ஏற்கச் சொல்லுகிறார்கள்.
இவர்கள் இதுவரை மக்களுக்கு சொல்லிவந்த சுயாட்சி இதுவா? அத்துடன் தாயகம் சுயநிர்ணய உரிமை வடக்கு, கிழக்கு இணைப்பு, சமஷ்டி என்று கூறி தேர்தலின் போது வாக்குகளைப் பெற்றவர்களும் இந்தக் கூட்டத்துடன் சேர்ந்துள்ளார்களா?
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்(கட்டுரை)