நடிகர் கமல் தொடர்ச்சியாக, அரசியல் சார்ந்த கருத்துக்களை வெளியிட்டுவருகிறார். மேலும், அதிமுக அரசினையும் அதன் அமைச்சர்களையும் மிக கடுமையாக சாடிவருகிறார். தான் அரசியலுக்கு வரவேண்டிய சூழல் வந்துவிட்டதாகவும், அதற்கான பாதையினை உருவாக்கியிருப்பவர்கள் ஆட்சியாளர்கள் தான் எனவும் வார இதழ் ஒன்றில் தொடர் ஒன்றினை எழுதியுள்ளார்.
அதில், “நான் யார் எனில் தமிழன், பிறப்பால் நீ பார்ப்பான் என்றால் அதனை நான் தெரிந்தெடுக்கவில்லை. மாறாக, பகுத்தறிவு நான் தேர்ந்தெடுத்த அறிவுநிலை எனவும், என்னுள் எஞ்சிய காவி மனதில் இல்லை. எப்போதாவது வெற்றிலையைக் குதப்பினால் வாயில் இருக்கக் கூடும். அது சாதியம் மெச்சும் புராதனக் கூட்டத்தின் கொள்கை விளக்கப் பிரகடனங்கள் மீது துப்ப ஏதுவாக இருக்கும்.’’ என தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் முதல்வராக வேண்டுமென்பது எமது ஆசை அல்ல, ஆட்சி பலத்தை அசைக்கக்கூடிய அகற்றக்கூடிய செயல் எதுவோ அதுவே என் ஆசை. புதிய தமிழ் மாநிலம் அடுத்த தலைமுறையாவது காணவேண்டும் என்ற பல தலைமுறை ஆசையை என் தலைமுறையாவது நிறைவேற்றத் துடிக்கும் தமிழனின் ஆசை.” எனவும் பல அதிரடி கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.